இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவில் தமிழர்கள், தென்னிந்தியர்கள், வடகிழக்கு இந்தியர்கள், சிறுபான்மையினர், பட்டியலின மற்றும் பெண் பிரதிநிதிகள் யாருக்கும் பாஜக அரசு இடமளிக்கவில்லை. எனவே அக்குழுவின் செயல்பாட்டினை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 

மத்திய அரசு இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு குழுவினை அமைத்துள்ளது, இக்குழு தற்காலத்தில் இருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான இந்திய கலாச்சாரம் குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் என மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்  பிரகலாத் சிங் பட்டேல் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். மேலும் அந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள 16 நிபுணர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த குழுவில் பண்டைய கலாச்சாரம், பெருமை படைத்துள்ள தமிழகத்தில் இருந்தும், தென்னிந்தியாவில் இருந்தும், வட கிழக்கு மாநிலங்களில் இருந்தும், ஒருவர் கூட இடம்பெறவில்லை. மேலும் இக்குழுவில் சிறுபான்மையினர், பட்டியல் இனம் மற்றும் பெண் ஆய்வாளர்கள் யாரும் இடம்பெறவில்லை. 

இடம்பெற்றுள்ள அனைவரும் தொல்லியல் துறைக்கு தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறார்களே தவிர, வரலாற்று ஆசிரியர்கள் யாரும் இடம்பெறவில்லை. அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுக் குழு வட இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்து அது மட்டுமே இந்தியாவின் ஒட்டுமொத்த கலாச்சாரம் என அறிக்கை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. இதன் மூலம் இந்தியாவினுடைய கலாச்சார பன்முகத்தன்மை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரம் புறக்கணிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவர்கள் சமர்ப்பிக்கும் அந்த ஆய்வறிக்கை இந்திய கலாச்சாரம் சம்பந்தமான அதிகாரபூர்வமான ஆய்வறிக்கை என்கிற அடிப்படையில் அது நாட்டின் வரலாற்று ஆவணமாகவும், பல்கலைக்கழகம் மற்றும் கல்வி  நிலையங்களின் ஆராய்ச்சிக்கு ஆவணமாகவும் முன்னிறுத்தப்படும் நிலைமை ஏற்படும். 

இது இந்தியாவின் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை உருவாக்கும், இந்தியாவின் பன்முக கலாச்சார அடையாளங்களை அழித்து விடும் ஆபத்து உள்ளது. செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி மற்றும் கலாச்சாரங்கள் மறுக்கப்படுவது வட இந்திய வேத கலாச்சாரமே இந்திய கலாச்சாரம் என தென்னிந்திய மக்கள் தலையில் திணிக்கப்படும் ஆபத்து ஏற்படும். மேற்கண்ட அம்சங்களை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் நாடாளுமன்றத்திலும் பதிவு செய்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மக்களின் அடையாளங்களை அழித்து ஒழிக்கும் மோசமான நோக்கோடு அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுக்குழுவினை செயல்படுத்தக் கூடாது என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மேலும் உடனடியாக ஆய்வுக் குழுவின் பணிகளை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.