மோடியையும், அமித் ஷாவையும் அவதூறாக பேசியதாக நெல்லை கண்ணன் மீது வழக்குகள் பாய்ந்து வருகிறது. அவரது வீட்டிற்கு முன் திரண்ட பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாலாபுறமும் அழுத்தங்களும், வழக்குகளும் அதிகரித்து வருவதால் அவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், அவற்றையெல்லாம் பற்றி துளியும் கவலை கொள்ளாத நெல்லை கண்ணன் வீட்டிற்குள் இருந்து கொண்டே பாஜகவை பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார். 

இணையதளங்களில் வரும் செய்திகளை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து அதற்கு கீழே கருத்து கூறுவது நெல்லை கண்ணனின் வாடிக்கை. அதனை தனது வீட்டிற்குள் இருந்து இப்போதும் செய்து வருகிறார். அவற்றில் சில, 

செய்தி: -இளைஞர்கள் துணிச்சலாக கேள்வி கேட்பது மிகவும் சிறப்பானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 
நெல்லை கண்ணன் கமெண்ட்:- மனச்சாட்சி உறுத்துகின்றது அதே நேரம் மமதையும் விலகவில்லை.

செய்தி:- இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் என்று ‘மன் கி பாத்’வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். 

நெல்லை கண்ணன் கமெண்ட்:- அது என்ன மூன்றாண்டுகள் அப்புறம் இந்தியாவில் தயாரிப்புகளே இல்லாமல் செய்து விடுவீர்களா? காந்தியடிகளைப் பற்றிப் பேசாமல் இருக்க இயலவில்லையே மோடி அவர்களே... அவர்தானே பாகிஸ்தானை பிரித்தார் என்றெல்லாம் சொன்னீர்களே

செய்தி:- பெண் கல்விக்காகப் போராடி வரும் மலாலாவை, உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண் என்று ஐநா சபை கவுரவித்துள்ளது. 
நெல்லை கண்ணன் கமெண்ட்:- அமித்ஷாவும் மோடியும் ஐ.நா.சபையை புறக்கணிக்கப் போவதாக ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கின்றது.

செய்தி:-ஆலந்தூரில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் 10 ஆயிரம் பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நெல்லை கண்ணன் கமெண்ட்:- எடப்பாடியும் பன்னீரும் டில்லியிலேயே குடியேறி விட்டால் நல்லது அமித்ஷா ஆணைகளை தாமதமின்றி செயல் படுத்தலாம்.

செய்தி:- கடந்த வெள்ளியன்று மீரட் பகுதியில் உத்தரப்பிரதேச போலீஸார் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதியில் ‘பாகிஸ்தானுக்குப் போங்கள்’ என்று கூறிய வீடியோ வைரலானதையடுத்து மத்திய சிறுபான்மை நல அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி போலீஸார் மீது ‘நடவடிக்கை’ கோரி வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை கண்ணன் கமெண்ட்:-இவர் ஒருஇந்து பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆரிய சமாஜமே இவர் திருமணத்தை நடத்தி வைத்தது எத்தனையோ இசுலாமியர்கள் கொல்லப் பட்ட போது வாய் திறக்காத போது இன்று இவர் நடிக்கின்றார்’’ என நச்சென்று கமெண்டுகளை பதிந்து வருகிறார் நெல்லை கண்ணன். 

மேலே உள்ள தலைப்பு நெல்லை கண்ணன் தனக்கு சொல்லிக் கொண்டதல்ல. மனச்சாட்சி உறுத்துகிறது... ஆனாலும் மமதையும் விலகவில்லை... என மோடிக்கு அவர் போட்ட கமெண்ட்...