congress shocked of supreme court question

தற்காலிக சபாநாயகரை மாற்றக்கோரிய வழக்கின் விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்ட ஒரு கேள்வி காங்கிரஸை கலங்கடித்தது. 

கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தற்காலிக சபாநாயகரை நியமித்து எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து, அவரே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து கர்நாடக சட்டசபையின் தற்காலிக ஆளுநராக போபையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமித்தார். போபையாவின் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று காலை நடந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை தொடங்கியதும் வாதாட தொடங்கிய காங்கிரஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போபையா, எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் நடத்தக்கூடாது. போபையா மூத்த உறுப்பினர் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, அவரது கடந்த கால செயல்பாடுகளும் சர்ச்சைக்கு உள்ளானவையாக உள்ளன என கபில் சிபல் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சபாநாயகர் நியமனம் சரியில்லை என்றால் இதுதொடர்பாக ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டி இருக்கும். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்றைக்கு நடத்தப்பட வாய்ப்பிருக்காது. நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க சம்மதமா? என நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து தற்காலிக சபாநாயகராக போபையாவே நீடித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பை தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்க சம்மதமா? என்ற நீதிபதிகளின் கேள்வியை கேட்டு காங்கிரஸ் பதறிப்போய்விட்டது.