தமிழகத்தில் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்து வருகிறது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் மழை வேண்டி அதிமுக சார்பில் சிறப்பு யாகம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், "தண்ணீர் பிரச்சினையை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. அதனால் தான், இன்று திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இத்தகைய சூழ்நிலையிலும் சிறிய தெருக்களுக்குக் கூட லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கிறோம். இதனை பாராட்டி ஸ்டாலின் வாழ்த்துப்பா பாட வேண்டும். ஆனால் அவர் செய்வாரா? நாங்கள் திமுகவை எதிர்க்கட்சியாகப் பார்க்கிறோம். ஆனால், திமுக எங்களை எதிரிக்கட்சியாக பார்க்கிறது. எத்தனை காலம்தான் காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்குவது என திமுக முன்னாள் அமைச்சர் கேள்விக்கு, "அது கூட்டணிக் கட்சிகளின் பிரச்சினை. அதில் நான் எந்த கருத்தும் சொல்லக்கூடாது. 1967-க்குப் பிறகு காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது" என அவர் தெரிவித்தார்.