இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக பாஜகவின் வெறுப்பு பிரசாரங்கள் ஃபேஸ்புக்கில் இடம் பெறுவதை அந்நிறுவனம் கண்டுகொள்வதில்லை என்று அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியானது. ஏற்கனவே அமெரிக்காவிலும் அதிபர் தேர்தலிலும் இதுபோன்ற சர்ச்சை வெடித்ததால், இந்தச் செய்தி இந்திய அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக அணுகிவருகின்றன.
இந்தியாவில் ஃபேஸ்புக்கின் செயல்பாடு ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. மேலும் அமெரிக்க பத்திரிகை செய்தி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை ஃபேஸ்புக் மீது வைத்துள்ளது. ஆனால், இதுபோன்ற குற்றசாட்டுகளை ஃபேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலான வெறுப்பு பேச்சுகளுக்கு ஃபேஸ்புக்கில் இடம் இல்லை என்றும் அந்நிறுவனம் விளக்கம் அளித்தது.


இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடு பாரபட்சமாகவும் நாட்டின் தேர்தல் ஜனநாயகத்தில் குறுக்கிடுவதாகவும் அமைந்துள்ளது. இப்பிரச்சினையை காங்கிரஸ் மட்டுமல்ல, வேறு சில கட்சிகளும் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் கிளப்பி உள்ளன. எனவே ஃபேஸ்புக் தலைமை, இந்தியாவில் உள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை குழு குறித்து விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை அறிக்கையை விரைவாக மக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிடவேண்டும். இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு புதிய தலைமையை நியமிக்க வேண்டும்” என்று கே.சி.வேணுகோபால் தெரிவிதுள்ளார்.