தமிழக சட்டமன்றத்திற்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கும் வரும் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடையே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவிற்கு கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்போதே கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளதாக பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் 2019-ல் நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவினார். தற்போது மீண்டும் அதே போட்டியிட உள்ளார். 

தனது தந்தையின் மக்களவை தொகுதியான கன்னியாகுமரியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமென விஜய் வசந்த் காங்கிரஸில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு போட்டியாக கார்த்தி சிதம்பரம் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி களமிறங்க வேண்டுமென விருப்ப மனு அளித்துள்ளார். பிரியங்கா காந்தி குறித்து கேட்கப்பட்ட கேள்வி பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரியில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், அந்த தொகுதி மக்கள் புதிய சரித்திரத்தை எழுத இருக்கிறார்கள் என்பதை முழுமையாக நம்புகிறேன் எனத்தெரிவித்தார். 

மேலும் கார்த்திக் சிதம்பரத்திற்கு அவர்கள் தலைவர்கள் மீது ஏதோ வன்மம் இருக்கிறது, அதைப் பற்றி நான் கூற விரும்பவில்லை. ஆனால் கன்னியாகுமரியில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது நிச்சயம். என் தோல்விக்கு பிறகே மக்களுக்கு என்னுடைய அருமை பற்றி தெரிய ஆரம்பித்திருக்கும், எனவே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களை எண்ணிப்பார்த்து பாஜகவிற்கே வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.