கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பிரத்யேகமாக கோவிட் சிகிச்சை மையம் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 250 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உட்பட 500 படுக்கை வசதிகள், 100 வென்டிலேட்டர்கள், 40 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் உள்ளன. மேலும் கூடுதல் ஆக்சிஜன் தேவையை சமாளிக்க 20 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் தொட்டி  நிறுவப்பட்டுள்ளது.

இதை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கொரோனா வைரசுக்கு பல்வேறு நடவடிக்கைளை அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவாமல் தடுக்க முடியும். அதேபோன்று பரிசோதனை செய்யப்பட்டு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டவுடன் பொதுமக்கள் மருத்துவமனைக்கு உடனடியாக வரவேண்டும். நோயாளிகள் தாமதமாக வருவதுதான் மருத்துவர்களுக்கு சவாலாக உள்ளது. மூச்சு திணறல், ஆக்சிஜன் அளவு குறைந்த பின் மருத்துவமனைக்கு வருவதால் நோயாளிகளை காப்பாற்றுவது சிரமமாக உள்ளது. நுரையீரல் பாதிப்பு அதிகம் ஏற்படும் போது அவர்களை காப்பாற்றுவது கடினம்.

மேலும், திரைப்பட பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. வசந்தகுமார் எம்.பி.க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு கொரோனா இல்லை. ஐந்து நாட்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நல்லக்கண்ணு வீடு திரும்புவார். அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.