9 முறை நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் கருத்து அரசியல் நாகரீகமற்றது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். 

காஷ்மீரை போல மத்திய அரசு நாளை தமிழகத்தை யூனியன் பிரதேசமாக ஆக்கினால் அதிமுக கைக்கட்டி, தலை வணங்கி நிற்கும் என ப.சிதம்பரம் கூறியிருந்தார். இது தொடர்பாக இன்று மேட்டூரில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் "ப.சிதம்பரம் எத்தனை ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்கு என்ன பயன். அவர் பூமிக்குத்தான் பாரம். அவருடைய பேச்சைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரத்தின் மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், முதலில் ஒரு முதல்வர் சொல்ல வேண்டிய வாசகமா இது? அவரைப் பற்றி நான் ஒரு வீடியோ பார்த்தேன். அதைப் பற்றியெல்லாம் நான் இங்கு பேச விரும்பவில்லை. ஒரு சரித்திர விபத்தால் முதல்வரானவர் எடப்பாடி பழனிசாமி. அப்படிப்பட்டவர் இப்படிப் பேசுகிறார்.

இந்தியாவின் நிதியமைச்சராக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவரை, ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என்று விருது வாங்கியவரை இப்படிப் பேசலாமா? எடப்பாடி பழனிசாமி சாமி கும்பிடுவார் என்று எனக்குத் தெரியும். நாளை காலை சாமி கும்பிடும்போது அவரே இதைப் பற்றி சிந்திக்கட்டும். அவருக்கு மனசாட்சி உறுத்துகிறதா இல்லையா என்று பார்ப்போம்" என்றார். 

மேலும், பேசிய அவர் ரஜினிகாந்த் எனது நண்பர். காஷ்மீரின் சரித்திரத்தை புரிந்துகொள்ளாமல், அங்குள்ள மக்களின் நிலைமையை புரிந்துகொள்ளாமல் அவர் பேசியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் காஷ்மீர் பிரச்சனையில் மட்டும் கருத்து சொல்லாமல், காவிரி பிரச்சனை, நீட் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் கருத்து கூற வேண்டும் என்றார். புராணத்தை படித்து அர்ஜூனன், கிருஷ்ணர் என அவர் கூறியிருக்கிறார். முதலில் அவர் சரித்திரத்த படிக்கவேண்டும். அதுவும் காஷ்மீர் சரித்திரத்தை படிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.