“ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால், அது ஜனநாயக முறைப்படிதான் இருக்க வேண்டும்."
ஆளுநரின் பயணத்துக்கோ பாதுகாப்புக்கோ இடையூறு வந்திருந்தால் அது மிகவும் கண்டனத்துக்குரியது என்று சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் வாகன அணிவகுப்பில் கொடி வீச்சு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞானரத யாத்திரை புறப்பட்டார். இந்த நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைப்பதற்காக மயிலாடுதுறைக்கு சென்றார். ஆளுநர் ஆர்.என் ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். ஆளுநர் வந்தபோது அவருடைய வாகனம் மீது கொடி கம்புகள் வீசப்பட்டன. ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அரசியல் கட்சிகள் கண்டனம்
ஆளுநர் வானகத்தின் மீது கொடி கம்பு வீசி நடந்த இந்தப் போராட்டத்துக்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திமுகவின் இன்னொரு கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம் கருத்து
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுபற்றி கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால், அது ஜனநாயக முறைப்படிதான் இருக்க வேண்டும். அவருடைய பயணத்துக்கோ பாதுகாப்புக்கோ இடையூறு வந்திருந்தால் அது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்தச் சம்பவத்தை வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறியதை ஏற்க முடியாது. திமுக - காங்கிரஸ் கட்சிக்கு இடையே உள்ள தேர்தல் உடன்பாட்டின்படி ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தருவார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
