நடிகர் ரஜினிகாந்த் தனியாக கட்சி தொடங்குவதற்கு பதில், வெளிப்படையாக பாஜகவிலேயே இணைந்து விடலாம் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சிஏஎ சட்டம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு ஆபத்து இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு மிகவும் முக்கியமான ஒன்று. அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதாயத்துக்காக இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுகிறார்கள். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் முன் ஆராய வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.


இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ரஜினியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்தார். “பொம்மலாட்டக்காரர்கள் எதை எழுதிக் கொடுக்கிறார்களோ அதை அப்படியே ஒப்பிக்கிறார் ரஜினி. இன்னும் ஏன் இந்தப் பித்தலாட்டம் என்றுதான் தெரியவில்லை. அவர் தனியாக கட்சி தொடங்குவதற்கு பதில், வெளிப்படையாக பா.ஜ.கவிலேயே இணைந்து விடலாம். அதுதான் சரியாக இருக்கும்.
பாஜக தமிழகத்துக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழர்களுக்கு எதிரான கட்சி. குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் எதிரானது. சரித்திரம் படித்தவர்களுக்கு இதெல்லாம் நன்றாகத் தெரியும். 1935-ல் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக சட்டத்தைக் கொண்டுவந்து யூத மக்களின் உரிமைகளைப் பறித்தார். அதேபோல, மோடி-அமித்ஷா உள்நாட்டு மக்களின் உரிமைகளைப் பறிக்க முயல்கிறார்” என்று கார்த்தி சிதம்பரம்  தெரிவித்தார்.