Asianet News TamilAsianet News Tamil

பணம் இருந்தால் வேட்பாளர் வாய்ப்பு’: காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஜோதிமணி எம்.பி. போர்க்கொடி

காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் விசுவாசமாக பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் பணம் இருப்பவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படுவதாக ஜோதிமணி எம்.பி. போர்க்கொடி தூக்கியுள்ளார்.

congress mp jothimani opposes her own party for giving chance to contest in election only to who has money power
Author
Chennai, First Published Mar 13, 2021, 6:56 PM IST

காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் விசுவாசமாக பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் பணம் இருப்பவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படுவதாக ஜோதிமணி எம்.பி. போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி தனது சமூக வலைதள பக்கத்தில், காங்கிரஸ் கட்சியில் தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

மேலும் காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.*

எனது தலைவர் ராகுல்காந்தி பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம் பி ஆகி இருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள ஜோதிமணி இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு என ஜோதிமணி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், " அன்னை சோனியாகாந்தி அவர்கள் தலைமையில் நடக்கும் மத்திய தேர்தல் குழு வில் எடுக்கும் முடிவு ஒவ்வொரு உண்மையான காங்கிர்ஸ் தொண்டனுக்கும் நியாமான முடிவாககிடைக்கும் ஆன சிலர் விளம்பரதிற்காக காங்கிரஸ் இயக்கதிற்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்தி எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்,  கட்சிக்காக உழைத்த முன்னாள் மாவட்டதலைவருக்கு அதுவும் சில நூறு ஒட்டில் தோல்வியடைந்தவருக்கு மீண்டும் வந்த தொகுதியை வாங்ககூடாது என சண்டை போட்டு வரவிடமால் தடுத்தவர்கள் இன்று நியாயம் பேசலாமா?" என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னால் நடக்கும் இந்த காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசல், அக்கட்சிக்கு மேலும் பின்னடைவை கொடுக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios