congress mla in minister seat

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மானிய கோரிகைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எப்போதும் எலியும் பூனையுமாக அதிமுக - திமுக கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் சபைக்கு ஒரு விரைப்போடு வந்து செல்வது வழக்கம். ஆனால், சமீபகால நிகழ்வுகள் முற்றிலுமாக தலைகீழாக மாறியுள்ளது.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்செல்வன் வெளிநடப்பு செய்ததோடு மட்டுமின்றி, திமுக உறுப்பினரான மா. சுப்பிரமணியனுடன் கைகோர்த்துக் கொண்டு அரட்டை அடித்த அதிசய சம்பவங்களும் அரங்கேறியது.

இந்த நிலையில் இன்று, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளே நுழைந்த எம்.எல்.ஏ.க்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிர்ச்சி அளித்தார் ஊட்டியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ்.

திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற கணேஷ் இன்று, சட்டப்பேரவை வளாகத்துக்குள் நுழைந்தவுடன் அதிரடியாக அமைச்சர்கள் இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார்.

பின்னர், அங்கு தனியாக அமர்ந்திருந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்துடன், சுவராசியமாக பேசத்தொடங்கி விட்டார். நீண்ட நேரமாகியும் அவர் அந்த இருக்கையைவிட்டு எழவில்லை.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியும், கணேஷ் தொடர்ந்து சண்முகத்துடன் பேசிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த திமுக உறுப்பினர்களுக்கு, காதில் புகை கிளம்பியது.

உடனே திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் எழுந்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எப்போது அமைச்சராக்கப்பட்டார் என சுவராசியமாக கேள்வி எழுப்பப்பட்டார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், தேவைப்பட்டால் அமைச்சராக்கலாம் என கூறியதால் சபையில் கலகலப்பு ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், கணேசை யாரும் எதிர்க்க வேண்டாம். காரணம், தனது தொகுதியான கோபிச்செட்டிபாளையத்துக்கு, ஊட்டியில் இருந்துதான் தண்ணீர் வருகிறது என சுவராசியமாக கூறினார்.

பின்னர் பேசிய கணேஷ், தனது தொகுதி நலத்திட்டங்கள் தொடர்பாக அமைச்சரிடம் பேசியதாக தெரிவித்தார். இதையடுத்து அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.