ஏற்கனவே அதல பாதாளத்தில் இருக்கும் காங்கிரஸ், அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் இடையிலான மோதலில் மேலும் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, கர்நாடகாவில் ஆட்சி பறிபோனது, மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழ்ந்தது, ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி என ஏற்கனவே காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இக்கட்டான சூழலில் உள்ளது. இந்த நிலையில் கட்சியின் செயல்பாடுகளை சரி செய்யும் வகையில் கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மேலிடத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் வளரும் தலைவர்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது மூத்த தலைவர்கள் மற்றும் வளரும் தலைவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். கட்சி இந்த அளவிற்கு மோசமான நிலைக்கு செல்ல காரணம் கட்சியின் மூத்த தலைவர்கள் தான் என்று சிலரின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டு இளம் தலைவர்கள் சிலர் பேசியதாக சொல்கிறார்கள். மேலும் கடந்த காலங்களில் காங்கிரசுக்கு எதிராக கூறப்பட்ட ஊழல் புகார்களை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதன் மூலம் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தனிப்பட்ட லாபம் அடையவே முயன்றார்கள் என்றும் வளரும் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் எரிச்சல் அடைந்த மூத்த தலைவர்கள் சிலர் இளம் தலைவர்களின் செயல்களை கடுமையாக விமர்சித்ததாக கூறுகிறார்கள். அனைத்திற்கும் அவசரம், பதவி ஆசை என இளம் தலைவர்கள் நினைப்பதால் தான் காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மூத்த தலைவர்கள் பதிலடி கொடுத்ததாக சொல்கிறார்கள். மேலும் 2ஜி ஊழலே இல்லை என்ற டெல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதோடு மட்டும் அல்லாமல் இளம் தலைவர்கள் அனுபவம் இல்லாமல் சில விஷயங்களை எதிர்கொண்டு கட்சியை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே இளம் தலைவர்கள் சிலர், மூத்த தலைவர்கள் உருவாக்கி வைத்துள்ள கோஷ்டிகளால் இளம் தலைவர்களால் செயல்பட முடியவில்லை என்றாலும். எந்த ஒரு செயலுக்கும் மூத்த தலைவர்கள் முட்டுக்கட்டை போடுவதாகவும் அவர்கள் சாடியுள்ளனர். இவ்வளவும் சோனியா காந்தி முன்னிலைலேயே நடைபெற்றுள்ளது. அப்போது இரண்டு முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இதனால் கூட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டு சோனியா சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கூட்டத்திற்கு பிறகும் கூட காங்கிரஸ் தலைவர்கள் இடையிலான மோதல் முடிவுக்கு வரவில்லை. இளம் தலைவர்கள் சிலர் மறைமுகமாக மூத்த தலைவர்களை விமர்சித்து ட்வீட் செய்துவருகின்றனர். இதனை புரிந்து கொண்டு மூத்த தலைவர்கள் அதற்கு பதில் கொடுத்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய அளவில் விரைவில் மி கப்பெரிய மோதல் வெடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மீண்டும் ராகுலை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று ஒரு கும்பல் முயன்று வருவதாகவும் அதனை நடக்கவிடாமல் மூத்த தலைவர் யாரையாவது காங்கிரசுக்கு தலைமை பொறுப்பை ஏற்க வைக்க வேண்டும் என்று மற்றொரு கும்பல் முயல்வதாகவும் சொல்கிறார்கள்.