நடிகர் விஜய் ரஜினி போல கீழே விழுகிறாரா அல்லது நிமிர்ந்து நிற்கிறாரா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் சார்பில் தருமபுரியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்றார். இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “ நடிகர் விஜய் வீட்டில் ஐடி ரெய்டு நடந்துள்ளது. தற்போது பாஜகவுக்குக் கடைசியாக கிடைத்திருக்கும் இலக்கு விஜய்தான்.  ஏன் என்றால், பாஜகவுக்கு சின்ன சந்தேகம் வந்திருக்கும். ரஜினியிடம் உள்ள ரசிகர்களுக்கெல்லாம் வயதாகிவிட்டது. விஜய்கிட்டத்தான் இளைஞர்களும் சின்னப்பசங்களும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று காவல் துறை சொல்லியிருக்கும். எனவே விஜய்யைப் பிடிங்கன்னு சொல்லியிருப்பார்கள்.
 நமக்கு  தெரிந்தவரை இப்ப என்ன நடந்துகொண்டிருக்கும் என்றால், விஜய்க்காக இப்போது ஓர் அறிக்கை தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். ரஜினி  எப்படி அறிக்கை விட்டாரோ அதே போல விஜய்யும் அறிக்கை விடுவதற்காக அந்த அறிக்கையைத் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த அறிக்கை என்பது விஜய்யோட தைரியத்தைப் பொறுத்தது. அவரும் ரஜினி போல கீழே விழுகிறாரா அல்லது நிமிர்ந்து நிற்கிறாரா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.
என்னைப் பொறுத்தவரை விஜய் உறுதியாக நிற்பார் என்றே  கருதுகிறேன். அப்படி அவர் உறுதியாக நின்றால், அவருக்கு நாங்கள் எல்லோரும் துணையாக இருப்போம்.” என்று பேசினார்.  நடிகர் விஜய் வீட்டில் ஐ.டி. ரெய்டு நடந்ததற்கும், அவரை நெய்வேலியிலிருந்து அழைத்து வந்து விசாரணை நடத்தியதற்கும் கே.எஸ். அழகிரி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்திலும் நடிகர் விஜய் குறித்து கே.எஸ். அழகிரி பேசியுள்ளார்.