எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி ஓரளவுக்கு பாராட்ட கூடியதாக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்களில் ஒருவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார் .  காங்கிரஸ் கட்சியில் சர்ச்சைக்குரிய நபர்களின் ஒருவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆவார்.   தாறுமாறாக விமர்சனங்களால் எதிர் தரப்பினரை டேமேஜ் செய்வதில் மிக வல்லவர்.  முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மற்றும் மோடி ஆகியோர் விமர்சித்து அதிமுகவினர் முற்றுகை செய்யும் அளவிற்கு  அதிமுகவினரை வம்பு இழுத்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் . 

 

அவர்தான் தற்போது  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டியுள்ளார் ,  சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .  ஈரோடு சூரம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார் , பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது .  இந்தச் சட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது . இச்சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர் . 

 இது அவர்கள் தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்,   மதத்தால் மொழியால்  இந்திய குடியுரிமை சட்டத்தினால் ,  நாட்டை பிளவுபடுத்த முயற்சிகள்  நடைபெறுகிறது ,  குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வராவிட்டால் பாரதிய ஜனதாவின் சகாப்தம் முடிந்து விடும் ,  காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்போது ஆயிரத்தை எட்டியுள்ளது .  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஓரளவுக்கு பாராட்ட கூடியதாக இருந்தாலும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று கூறுவதினால்  அவருக்குள்ள நல்ல பெயருக்கு மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.