திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விருப்ப மனு வழங்கியவர்களிடம் நேர்க்காணல் நடைபெற்றபோது கரூர் தொகுதியைச் சேர்ந்தவர்களை ஒன்றாக அழைக்கப்பட்டு, இந்தத் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக திமுக தலைமை கூறியதால் அக்கட்சியின் கரூர் நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். செந்தில் பாலாஜி, சின்னசாமி, நன்னியூர் ராஜேந்திரன், கே.சி.பழனிச்சாமி என இந்தத் தொகுதியில் போட்டியிட திமுகவினர் பலரும் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், தொகுதியே திமுகவுக்கு இல்லாமல் போனதால், விரக்தி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே கூட்டணி கட்சியான காங்கிரஸ் மேலிடமே கரூர் தொகுதியைக் கேட்டதால்தான் அக்கட்சிக்கு கரூர் ஒதுக்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குட் புக்கில் இடம் பிடித்துள்ள ஜோதிமணிக்காகவே அந்தத் தொகுதி கேட்டு பெற்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜோதிமணி கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சுமார் 30 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். இதேபோல 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவாக்குறிச்சி தொகுதியில் போட்டியிட என்னென்னவோ செய்துபார்த்தார். தற்போது அழகாக காய் நகர்த்தி மேலிடம் மூலம் கரூர் தொகுதியை தனக்காக கேட்டு வாங்கியிருக்கிறார் என்று காங்கிரஸார் தெரிவிக்கிறார்கள்.


தொடக்கத்தில் திருச்சி, அரக்கோணம், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளை ஒதுக்குவதில் திமுக - காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்துவந்தது. தொகுதி ஒதுக்கீட்டில் கரூர் தொகுதி தொடக்கம் முதலே திமுக பட்டியலில்தான் இருந்தது. திடீரென அந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டது. வெற்றி வாய்ப்புள்ள தொகுதி என்பதால், அந்தத் தொகுதியைத் தர திமுக தயக்கம் காட்டியது. ஆனால், கரூர் தொகுதியைப் பெறுவதில் ராகுல் காந்தியே ஆர்வம் காட்டியதால், வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சிக்கு கரூர் தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதாக திமுக வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது, அதில் ஜோதிமணி பெயரே இருக்கும் என்று அடித்துசொல்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.