பேரறிவாளனை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரத் தழுவியது அவரது உரிமை அவருக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் நான் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் மூத்த தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளனை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரத் தழுவியது அவரது உரிமை அவருக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் நான் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் மூத்த தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் நிரபராதி என்று உச்ச நீதிமன்றம் எந்த இடத்திலும் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
ராஜீவ் கொலை வழக்கில் 33 ஆண்டுகள் சிறையில் கழித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அதை காங்கிரஸ் பாஜக அல்லாத பிற கட்சிகள் வரவேற்று பாராட்டி வருகின்றன. பேரறிவாளன் விடுதலையானவுடன் தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவரை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆரத்தழுவி வாழ்த்தினார். இதை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜகவும் முதல்வரின் நடவடிக்கையை விமர்சித்தும் கண்டித்தும் வருகிறது. அதேநேரத்தில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் தமிழக முதலமைச்சரின் செயலை கண்டித்தும் விமர்சித்தும் பேசி வருகின்றனர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தனியார் ஊடகம் ஒன்று எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார், அதில், பேரறிவாளன் விடுதலையை முதல்நாள் வரவேற்று விட்டு பிறகு அவரின் விடுதலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக பேசி இருக்கிறீர்களே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் திருநாவுக்கரசர், பேரறிவாளன் விடுதலையை வரவேற்கிறேன் என்ற வார்த்தையை நான் எங்கும் பயன் படுத்தவில்லை, அதேநேரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை என்றுதான் நான் சொன்னேன். ஆனால் நான் பேசியது திரிக்கப்பட்டு இருக்கிறது, அதற்கு நான் பொறுப்பாக முடியாது. பேரறிவாளன் விடுதலையை வரவேற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
காங்கிரஸ் கட்சியின் எம்பியாக இருந்தாலும், அக்கட்சித் தொண்டன் என்கிற முறையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அறிவித்த போராட்டத்தில் பங்கேற்று பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து பேசி இருக்கிறேன். காங்கிரசை பொருத்தவரையில் இந்த தீர்ப்பை எதிர்க்கவே செய்கிறோம், அதில் எங்களுக்கு எந்த தடுமாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், சோனியாகாந்தியின் குடும்பத்தார் பெருந்தன்மையோடு சாந்தன் முருகன் பேரறிவாளன் நளினி உள்ளிட்டோரை மன்னிக்கலாம், ஆனால் ராஜீவ் காந்தி ஒரு குடும்பத்துக்கு மட்டும் தலைவர் அல்ல அவர்கள் உலகத் தலைவர் அவரை நேசிக்க தொண்டர்கள் மத்தியில் அவரது படுகொலை ஆறாத வடுவாக மாறி விட்டது. பேரறிவாளன் விடுதலை சட்ட வரம்புக்கு உட்பட்டதாக இருக்கலாம். ஆனால் தர்மத்திற்கு எதிரானது.

முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய எப்படி பார்ப்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது அவரது உரிமை, அவருக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் நான் இல்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலினின் செயலை காங்கிரஸ் ஏற்கவில்லை முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனை சந்தித்ததுபோல பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரையும் நேரில் சந்தித்து இருக்க வேண்டும். அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
