பொங்கல் வாழ்த்து சொல்வதற்கான கே.எஸ்.அழகிரி செல்போனில் தொடர்பு கொண்ட போது வெறும் பொங்கல் வாழ்த்துடன் முடித்துக் கொண்ட ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரியை சந்தித்ததன் பின்னணியில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது.

கட்சி தற்போது இருக்கும் சூழலில் திமுக போன்ற ஒரு வலுவான கட்சியை கூட்டணியில் இருந்து இழப்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதை சோனியா – ராகுல் ஆகிய இரண்டு பேருமே தெரிந்து வைத்திருந்தனர். இதன் காரணமாகத்தான் வழக்கத்திற்கு மாறாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் நேரடியாக தலையிட்டு ஸ்டாலினை சமாதானப்படுத்தியது என்கிறார்கள். பிரச்சனை ஆரம்பம் ஆன போதே அழகிரி மன்னிப்பு  கேட்டு அறிக்கை விட்டால் தான் பிரச்சனை தீரும் என்று திமுக பிடிவாதம் காட்டியது. 

இதன் அடிப்படையில் அழகிரியை மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிடும் படி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல் போன்றோர் அறிவுறுத்தினர். ஆனால் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்ட அழகிரி பட்டும் படாமல் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையை ஏற்க திமுக மறுத்துவிட்டது. இந்த நிலையில் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்ல திமுக – காங்., கூட்டணிக்கு என்ட் கார்டு போடும் அளவிற்கு விவகாரம் பெருசானது.

இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் திமுகை விட சிறந்த கட்சி கூட்டணிக்கு கிடைக்காது என்பதை சோனியா உணர்ந்திருந்தார். மேலும் அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல். எனவே திமுகவை சமாதானம் செய்வதை தவிர வேறு வழியே இல்லை. இதனால் சோனியாவே ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியதாக சொல்கிறார்கள். மேலும் அழகிரியை தொடர்பு கொண்டு ஸ்டாலினை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்கவும் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

இதன் அடிப்படையில் ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி தர்மம் என்று பெரிய வார்த்தையை பயன்படுத்திவிட்டேன், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அழகிரி கூறியுள்ளார். இதனை எதிர்பார்த்து காத்திருந்த ஸ்டாலினும் சரி விடுங்கள் அடுத்த வேலையை பார்ப்போம் என்று மன்னித்துவிட்டதாக கூறுகிறார்கள். அதே சமயம் அழகிரி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டே ஆக வேண்டும் என்கிற நிலையில் இருந்து திமுக ஒரு படி கீழே இறங்கி வந்ததன் பின்னணியில் கூட்டணி கணக்கு ஒன்று உள்ளது என்று கூறி ட்விஸ்ட் வைக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.