பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்திற்கு, இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகாரளித்துள்ளது. 

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்துடன் பாஜக செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பஞ்சாப், கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பாஜக தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ஆட்சியை பிடித்துவிட்டது. 

இந்த ஆண்டு இறுதியில் பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகாரளித்துள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் இந்த புகார் மனுவை அளித்தனர். பின்னர் பேசிய கமல்நாத், பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் பாஜகவின் ஆதரவுடன், போலி வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே வாக்காளரின் பெயர் பல தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க கோரியுள்ளோம் என்றார் கமல்நாத்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகையே 24% தான் அதிகரித்துள்ளது. ஆனால் வாக்காளர்களின் எண்ணிக்கை 40% உயர்ந்திருப்பது விசித்திரமாக இருக்கிறது என கமல்நாத் தெரிவித்தார்.

காங்கிரஸின் புகாரை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.