ஓரிரு பதிவுகளுடன் கடந்து போய்விடவே முடியாது முரசொலி பவளவிழா பொதுக்கூட்ட நிகழ்வுகளை. தமிழகத்தின் நாளைய அரசியலை தீர்மானிக்க வாய்ப்பிருக்கும் ஏகப்பட்ட விஷயங்கள் கொட்டிவாக்கத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பதறாமல், சிதறாமல் ஒவ்வொன்றாய் காண்போம்...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எந்த அணியிலிருந்து தலைவராக வந்தாலும் கூட எந்த உத்வேகமும் இன்றி சம்பிரதாயமாக உதிர்க்கும் ஒரு வாக்கியம் ‘தமிழகத்தில் காமராஜரின் ஆட்சி அமைய பாடுபடுவோம்.’ என்பதுதான். தற்போது அந்த பதவியிலிருக்கும் திருநாவுக்கரசரும் இதை கூறியிருந்தார்.

ஆனால் காலத்தின் கோலம் அவரை தலைகீழாக மாற்றிவிட்டது போலும். காமராஜரின் இடத்தில் ஸ்டாலினை அமர்த்திவிட்டு, ‘தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைய வேண்டும். அதற்கு காங்கிரஸ் துணை நிற்கும்.’ என்று முழங்கியிருக்கிறார்.

அரசரின் இந்த சரண்டர் பேச்சு தன்மானம் மிகு தமிழக காங்கிரஸின் முக்கிய தலைவர்களை அதிரவைத்திருக்கிறது. நம் காங்கிரஸின் பெருந்தலைவர் காமராஜர் இடத்தில் வைக்கப்படுமளவுக்கு அரசரின் மனதில் தி.மு.க.வின் செயல்தலைவர் ஸ்டாலின் இடம்பிடித்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளனர்.

திருநாவுக்கரசரிடம் ஏன் இந்த மாற்றம், தடுமாற்றம்? இத்தனைக்கும் என்னதான் தி.மு.க.வின் கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் கூட அக்கழகத்துக்கு நெருக்கமான மனிதராக இருந்ததேயில்லை திருநாவுக்கரசர். சொல்லப்போனால் அவரை அ.தி.மு.க.வில் இல்லாத ஜெ., அனுதாபி என்றுதான் அரசியல் பார்வையாளர்கள் விமர்சிப்பார்கள். ஜெ., மரணத்துக்குப் பின்னான அவரது வருத்தங்களும், ஆதங்கங்களும் அதை நிரூபிப்பதாகவே அமைந்தன. 

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சில நேரங்களில் தி.மு.க.வின் மீது சம்மட்டியடி விமர்சனம் வைப்பார், பின் சகலமும் தலைவர் கருணாநிதிக்கே வெளிச்சமென சரணாகதியடைவார். அரசர் எந்த காலத்திலும் இப்படிப்பட்ட நிலையை எடுத்ததில்லை. சொல்லப்போனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அரசர் வந்து அமர்ந்ததில் ஸ்டாலின் வகையறாவுக்கு விருப்பமும் இருக்கவில்லை. 

அப்பேர்ப்பட்ட திருநாவுக்கரசர் இன்று ஸ்டாலினை முதல்வராக கொண்டாடுகிறார் என்றால் இது காங்கிரஸ்காரர்களுக்கு மட்டுமில்லை, தி.மு.க.வினருக்கே ஆச்சரியத்தை தந்திருக்கிறது. 

அரசரின் இந்த ‘அல்வா’ பேச்சுக்கு காங்கிரஸிலுள்ள அவரது ஆதரவாளர்கள் என்ன பதில் தருகிறார்கள்?...’’தலைவர் திருநாவுக்கரசர் சொன்னதில் தவறு ஏதுமில்லை! இவர் தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு மாநிலம் முழுவதும் எங்கள் இயக்கத்தில் ஏதேனும் பெரிய குழப்பங்கள், அடிதடிகள் ஏதேனும் நடைபெற்றதா என்று சொல்லுங்கள். சில நாட்களுக்கு முன் சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸுக்குள் நடந்ததற்கு தலைவர் பொறுப்பாக மாட்டார். 

ஆக மாநில கட்சிக்குள் ஒரு சுமூக அலையை உருவாக்கியிருக்கும் அரசர், யதார்த்த அரசியல் செய்ய விரும்புகிறார். கூட்டணியாக மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் எனும் நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது. எங்களின் துணை தி.மு.க.தான் என்பது பல காலமாக உறுதியாகிவிட்ட நிலை. ஆக கூட்டணியின் தலைமையை புகழ்ந்தும், அனுசரித்தும் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது?

ஸ்டாலின் தான் அடுத்து முதல்வராவார் எனும் பேச்சு மாநிலம் முழுக்கவே இருக்கிறது. இதைத்தான் அந்த மேடையில் தலைவரும் வழி மொழிந்திருக்கிறார். என்னதான் ஸ்டாலின் முதல்வரானாலும் அமைச்சரவையில் காங்கிரஸுக்கான பிரதிநிதித்துவத்தை நிச்சயம் அரசர் கேட்பார். கூட்டாக சேர்ந்து தேர்தலை சந்தித்தது போல், ஆட்சியிலும் கூட்டணியைத்தான் வலியுறுத்துவார். 

பேரவையில் கணிசமான எம்.எல்.ஏ.க்களை அமர்த்தி, அதில் சிலரை அமைச்சராக்கி, அவர்களின் மூலம் தமிழக மக்களின் அபிமானத்தை சம்பாதித்து என மெதுவாக மெதுவாக காங்கிரஸை தமிழகத்தில் காலூன்ற செய்து அதன் பின் கூடிய விரைவில் காமராஜர் ஆட்சியை நிச்சயம் அமைக்க பாடுபடுவார். இதுதான் மிக சரியான அரசியல் சாணக்கியத்தனம். 

அதைவிடுத்து, வெறும் பேச்சுக்கு மட்டுமே ‘காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்று சொல்லி வீம்புக்கு தி.மு.க.வுடன் முறைத்துவிட்டு, கடைசியில் வேறுவழியில்லாமல் அதே தி.மு.க.வின் காலில் போய் விழுந்து சொற்ப இடங்களை தேர்தலுக்காக பெறுவது அடிமுட்டாள் தனம்.” என்று பொளேர் விளக்கம் தட்டுகிறார்கள். 

அப்படிங்களா அரசர் சார்?!