’என்னை அவ அடிக்க! அவ என்னைய அடிக்க’ எனும் டயலாக்தான் நினைவுக்கு வருகிறது ஸ்டாலினிடம் முறைப்புக் காட்டி மோதிய காங்கிரஸின்  பரிதாப நிலையைப் பார்த்து. உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு, தலைவர்கள் பதவிகள் பிரிப்பு என எதிலுமே கூட்டணி தர்மத்தை பின்பற்றாத தி.மு.க. மீது வருத்த மடல் வாசித்தது காங்கிரஸ். இதற்கு நியாயப்படி தி.மு.க. தான் காங்கிரஸிடம் மன்னிப்பு கேட்டு, சமாதானம் செய்ய வேண்டும். ஆனால் நடப்பதோ தலைகீழ். இப்படியொரு அதிருப்தி அறிக்கை வெளியிட்டதற்காக தமிழக காங்கிரஸின் தலைவர் கே.எஸ்.அழகிரியை பிரித்து மேய வைத்துவிட்டார் ஸ்டாலின். 

குறிப்பாக ‘எங்கள் கூட்டணியிலிருந்து, ஓட்டே இல்லாத காங்கிரஸ் பிரிந்து சென்றாலும் கவலையில்லை.’ என்று துரைமுருகன் பேசியதெல்லாம் உச்சபட்ச அவமானம். இப்படியொரு விமர்சனத்தை சுருக்கென சொல்லிய பின்னும், தி.மு.க.வை காங்கிரஸ் தாங்கிக் கொண்டிருப்பதை கதர் கட்சியின் தன்மான தொண்டர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிலும் இன்று அறிவாலயத்துக்கே நேரில் சென்று ஸ்டாலினை, தி.மு.க.வை கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய புள்ளிகள் சமாதானம் செய்ததை, காங்கிரஸின் தன்மான தொண்டர்களாலும் இரண்டாம் நிலை நிர்வாகிகளாலும் தாங்கிக்க முடியவில்லை. அழகிரி அறிவாலயத்தில் இருக்கையிலேயே இணையதளங்களில் தங்கள் வேதனைகளை கொட்டித் தீர்த்துவிட்டனர். 

அதில் ஹைலைட்டாக ‘கூட்டணி தர்மத்தை மீறி நடந்தது தி.மு.க. தான். அதற்காக அவர்கள்தான் நம்மிடம் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் நாம் இப்படி குப்புற விழுந்து மீசையில் மண்ணை ஒட்டிக் கொள்வதென்பது அசிங்கம். ஸ்டாலினின் காலில் விழுந்து, கூட்டணியை தொடர்ந்து, எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பத்து சீட்களை வாங்கி, நாலு எம்.எல்.ஏ.க்கள் ஜெயிக்கிறதை விட, கவுரவமா தனியா நின்னும் தோத்துடலாம். நாம இந்த நாட்டுக்கே சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சிய்யா! சுயமரியாதை இழந்து திரிய வேண்டாம் நாம்.” என்று பொங்கியிருக்கின்றனர். ஆனால் இதை கேட்கத்தான் ஆளில்லை!

-விஷ்ணுப்ரியா