மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க வராததால், அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்தார். 

இதனையடுத்து நேற்று அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தபிறகும், சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எப்படியும் ஆட்சியை அமைத்து விடலாம் என நம்பிக்கையுடன் உள்ளன.

நேற்று மும்பை வந்த காங்கிரசின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன் கார்கே, அகமது படேல், பிரபு படேல் மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் சிவ சேனாவுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் மற்றவர்களுடன் ஆலோசனை நடத்தினர். 

அப்போது சிவ சேனாவுடனான கூட்டணி அரசில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என சரத் பவார் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சுழற்சி அடிப்படையில் தேசியவாத காங்கிரசுக்கு முதல்வர் பதவியை கொடுக்க வேண்டும். 

அதேசமயம் காங்கிரசுக்கு முழுமையாக 5 ஆண்டு காலம் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும். மேலும் மாநிலத்தில் பொதுவான குறைந்தபட்ச திட்டங்களை அமல்படுத்த வேண்டும் இதற்கு சிவ சேனாவுக்கு சம்மதம் என்றால் அதன் தலைமையில் கூட்டணி அரசை அமைக்க ஆதரவு அளிக்கலாம் என தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.