ஒன்றாக இணைந்து பணியாற்ற மேற்கு வங்க முதல்வரும் திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி விடுத்த அழைப்பை நிராகரித்து காட்டமாகப் பதில் அளித்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  
நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் திரினாமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 35 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தில் ஆட்சி நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்திலிருந்தே மேற்கு வங்காளத்தில் திரினாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே மோதல் போக்கு இருந்துவருகிறது. தேர்தலில் மேற்கு வங்காளத்தில் கணிசமாக பாஜக வெற்றி பெற்றிருப்பதால், இந்த மோதல் போக்கு இரு கட்சிகளிடம் இடையே அதிகரித்துள்ளது.


திரினாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் என பலரும் பாஜகவுக்கு மாறிவருகிறார்கள். இதனால், பாஜகவுக்கு எதிராக மம்தா பானர்ஜி கொந்தளிப்பில் உள்ளார். இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் தனி அரசங்காம் நடத்த பாஜக முயற்சிப்பதாக மம்தா புகார் கூறிவருகிறார். அதனையொட்டி , “பாஜக அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எல்லா கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய அணியை உருவாக்க வேண்டும்” என்று இரு தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் அழைப்புவிடுத்தார் மம்தா பானர்ஜி.
இந்த அழைப்பை காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிராகரித்துவிட்டன. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி கூறுகையில், “இடதுசாரிகளை வெறும் எதிர்க்கட்சியாகப் பார்க்காமல் எதிரிகளாகவே திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கருதிவருதுகிறது. மேற்கு வங்காளத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை அக்கட்சியினர் ஆக்கிரமித்தனர். ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். திரிணாமூல் காங்கிரஸின் வன்முறைகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற சூழலில் இணைந்து செயல்பட மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருப்பது அர்த்தமற்றது” என்று தெரிவித்தார்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்கையில், “மம்தா பானர்ஜியின் கொள்கைகளால்தான் மேற்கு வங்காளத்தில் பாஜக வளர்ச்சியடைந்தது” குற்றம் சாட்டியுள்ளது.