பிரதமர் மோடி ஆட்சி தொடர்வதை தடுக்க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

மக்களவை தேர்தல் தொடங்கியது முதலே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மக்களவை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களமிறங்கி உள்ளார். இங்கு திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜ, இடதுசாரிகள் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து பாஜவை எதிர்கொள்வோம் என கூறப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்தது. ஆனால் இந்த கூட்டணியில் காங்கிரஸ் சேர்க்கப்படவில்லை.

அதேபோல் மேற்கு வங்கத்தில் கூட்டணி அமைக்காமல் மம்தா தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். பாஜக ஆட்சியை அகற்ற விரும்பும் மம்தா பானர்ஜி மாநில கட்சிகளின் கூட்டணியில் தான் ஆட்சி அமையும் என்று கூறிவந்தார். ராகுலுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்காமலும் மம்தா பானர்ஜி பேசி வந்தார். இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த வன்முறை சம்பவம், மோடி பிரசாரத்துக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அனுமதி போன்ற செயல்களால் மம்தா கடும் கோபம் அடைந்துள்ளார்.

 

இதனால் மோடியை எப்படியும் இம்முறை பிரதமர் பதவிக்கு வரவிடக்கூடாது என தீர்க்கமாக முடிவு செய்துள்ள அவர், தனது நிலையை மாற்றிக் கொண்டு தற்போது அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தலுக்கு பிறகான கூட்டணி அமைப்பதில் உறுதியாக உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வலு சேர்க்கும் என்பதால், காங்கிரஸ் தலைவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேவேளை இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.