confusions over jayalalitha death continues ministers keep on saying lies
முந்நூறு நாட்கள் கடந்து விட்ட நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து பல்லாங்குழி ஆடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். ஒரு எதிர்கட்சி செய்ய வெட்கப்படும் வேலையை ஜெயலலிதாவால் வாழ்க்கை பெற்றவர்களே கிஞ்சிற்றும் கவலையின்றி செய்வது அ.தி.மு.க.வின் சரிந்த வரலாற்றில் சேறு பூசிய கதையாக மாறியிருக்கிறது.
’அய்யா உங்க எல்லார்கிட்டேயும் பெரிய மன்னிப்பு கேட்டுக்கிறோம். அம்மா ஹாஸ்பிடல்ல இருக்கிறப்ப அவங்களை பார்த்தோம்! இட்லி சாப்பிட்டாங்க, சட்னி சாப்பிட்டாங்கன்னு பொய்யா சொல்லிட்டோம்.’ என்று திண்டுக்கல் சீனிவாசன் கொளுத்திப்போட்ட நெருப்பு பேய்த்தனமாக எரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் அதிர்ந்து நிற்கிறார்கள்.
சரி! சீனியர் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் சொன்னது போல் யாருமே ஜெயலலிதாவை அப்பல்லோவினுள் பார்க்கவில்லை என்றால், எல்லா அமைச்சர்களும் அதை ஒப்புக் கொண்டுவிட்டாலும் பரவாயில்லை. சரி ஒரு பொது அமைதிக்காகவும், கட்சியின் நலனுக்காகவும் எல்லோருமே இப்படியொரு கூட்டு முடிவை எடுத்திருக்கிறார்கள், அது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்று சொல்லிவிட்டு போய்விடலாம்.
ஆனால் நிலைமை அப்படியில்லையே இங்கே. அமைச்சர்களில் சிலர் இதில் முரண்படுகிறார்கள், பலரோ மெளனம் காக்கிறார்கள்.
சீனிவாசனின் கருத்தை அமைச்சர் வீரமணி வழி மொழிந்திருக்கிறார். ஆனால் செல்லூர் ராஜூவும், நிலோபர் கபிலும் இதிலிருந்து முரண்பட்டிருக்கிறார்கள்.
மற்றொரு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரோ ‘அம்மா இறப்பு விஷயம் தொடர்பாக விசாரணை செய்ய கமிஷன் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில் இது பற்றி பேசக்கூடாது.’ என்று இறையாண்மையை இறுக்கிப்பிடித்து காப்பாற்றி பேசுகிறார்.
அப்படியானால் தமிழக அமைச்சர்களுக்குள் ஒட்டுமொத்தமாய் இணக்கமான சூழ்நிலை இல்லையா? என்று விமர்சகர்களை கேட்க வைத்திருக்கிறது. அதுமட்டுமில்லை, மற்ற விவகாரங்களில் இப்படி முரண்பட்டாலும் கூட பரவாயில்லை தாங்கள் குலசாமியாகவும், குடும்ப சாமியாகவும் வணங்கிய ஜெயலலிதாவின் மரண விவகாரத்திலேயே இப்படி பல்லாங்குழி ஆடுவதைத்தான் சகிக்க முடியவில்லை என்கிறார்கள். கூடவே அ.தி.மு.க. எனும் பிராண்ட் மீதான நம்பகத்தன்மையே அறுந்து போய்க் கொண்டிருக்கிறது என்றும் சாடுகிறார்கள். காரணம், அன்று அப்பல்லோ வாயிலில் பொய் சொல்கிறோம் என்கிற கூச்சமே இல்லாமல் அழகாய் நடித்திருக்கிறார். அது பொய் என்று அவரே ஒப்புக் கொள்கிறார் இப்போது. இனி மக்களுக்கான அரசின் பணிகளில் துவங்கி அவர் எதை சொன்னாலும் எந்த அடிப்படையில் நம்புவது? ஒருவேளை இதுவும் பொய்யே என்று சில மாதங்கள் கழித்து மன்னிப்பு கோருவாரோ என்று மக்கள் சிந்திக்க துவங்கிவிட்டதை மறுக்க முடியாது என்று அழுத்திச் சொல்கிறார்கள் விமர்சகர்கள்.
அ.தி.மு.க.வினுள் எடப்பாடி அமைச்சரவையின் பொது எதிரி தினகரன் அணிதான் என்று பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அவர்களுக்குள்ளேயே குழப்பங்கள் வெடித்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. இதை பயன்படுத்தி தங்கத்தமிழ் செல்வன் அமைச்சர்களை விளாசிக் கொட்டியிருப்பது அ.தி.மு.க.வின் தன்மானத்திற்கு விடப்பட்ட மாபெரும் சவுக்கடி.
- விஷ்ணுபிரியா
