தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்தவர் தாமோதர ராஜ நரசிம்மா. காங்கிரஸ் தேர்தல் திட்ட கமிட்டி தலைவராக இருக்கிறார். இவரது மனைவி பத்மினி ரெட்டி. இவரும் காங்கிரஸ் உறுப்பினர். இந்நிலையில் பத்மினி ரெட்டி திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் சேர்ந்தார்.

இதற்கான விழா வியாழக்கிழமையன்று பகல் 12 மணியளவில் நடந்தது. பத்மினி ரெட்டி, தங்கள் கட்சியில் சேர்ந்ததை பாஜக-வினர் கொண்டாடித் தீர்த்தனர்.தெலுங்கானா மாநில பாஜக தலைவர் லட்சுமண் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் ஆகியோர் உறுப்பினர் அட்டையை வழங்கி, பத்மினி ரெட்டியை புகழ்ந்து தள்ளினர்.

“பத்மினி ரெட்டி மிகச்சிறந்த பெண் தொண்டர். சமூகப் பணிகளில் ஈடுபட்டு கரீம்நகர் மாவட்டத்தில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்; அவரது பணியால் அந்த பகுதி மக்கள் பெரும் நன்மைகள் அடைந்துள்ளனர்; ஆனால் காங்கிரஸ் அவரை புறக்கணித்து விட்டது; உரியமுறையில் நடத்தவில்லை; பாஜக-வில் அவரது பயணம் சிறப்பாக இருக்கும்” என்று உருகினர்.

அத்துடன், பத்மினி ரெட்டி பாஜக-வில் இணைந்ததால் காங்கிரஸூக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, கிண்டலும் செய்தனர்.எல்லாம் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஒன்றுமில்லாமல் போனது.

இரவு 9 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த பத்மினி ரெட்டி, மீண்டும்காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்து விட்டதாக அறிவித்தார். தொண்டர்களின் விருப்பம் காரணமாக, காங்கிரசுக்கு திரும்ப வேண்டியதாகி விட்டதாகவும் அவர் கூறினர். இது தெலுங்கானா மாநில பாஜக தலைவர்களுக்கு மிகுந்த அவமானமாக போனதுடன், அவர்களை தற்போது அதிர்ச்சியிலும் உறைய வைத்துள்ளது.