அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளின் தொடர் பேச்சுவார்த்தை மூலமாக எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

ஆட்சிக்கு நீங்கள், கட்சிக்கு நான்... முதல்வர் வேட்பாளராக நீங்கள் இருந்து கொள்ளுங்கள். கட்சியின் பொதுச்செயலாளர் பதவி எனக்கு வேண்டும் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் வைத்த கோரிக்கையை எடப்பாடி நிராகரித்தார். இந்த விவகாரம் குறித்து இரு தரப்பினரும் பிடிவாதத்தில் ஈடுபட, 28ம் தேதி செயற்குழுவை கூட்டி முடிவெடுத்துக் கொள்ளலாம் என இருதரப்பும் தற்காலிகமாக கலைந்து சென்றனர். 

ஆனால் அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி வீட்டில் சில அமைச்சர்களும், முக்கியஸ்தர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் ஓ.பி.எஸையும் சந்தித்துப்பேச்சூவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை மூலம் இருவருக்குள்ளும் சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் அக்கட்சியினர். அதன்படி, 
முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலக ஓ.பி.எஸ்., ஒப்புக் கொண்டுள்ளார். அவரை கட்சியின் பொதுச்செயலராக நியமிக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டுள்ளார். கட்சிக்கு ஓ.பி.எஸ்., ஆட்சிக்கு எடப்பாடி பழனிசாமி என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

துணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி அவைத் தலைவராக நியமிக்கப்பட முடிவெடுத்துள்ளனர். எக்காரணம் கொண்டும், கட்சியில் மீண்டும் சசிகலாவுக்கு இடம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே, காலியாக உள்ள பொதுச்செயலாளர் பதவியில் ஓ.பி.எஸை அமர வைக்க முடிவு செய்துள்ளனர். சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சிக்கும் அனுதாபிகளையும் ஓரங்கட்டுவதற்கு, இரு தரப்பினரும் ஒருமித்த முடிவு எடுத்துள்ளதாக அதிமுக முக்கியப்புள்ளிகள் கூறுகின்றனர்.