45 நாட்களும் டாஸ்மாக் கடைகளை மூடாமல் தினமும் 2 மணி நேரம் திறந்திருக்கலாம் என காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம்  கருத்து தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லுக்கட்டி வடபகுதியில் ஏழைகள் 500 பேருக்கு சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் அன்னதானம் வழங்கினார். பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகத்தில் 45 நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் ஒரே நாளில் திறக்கப்பட்டன. இதனால் தான் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. பொது முடக்கத்தின் போது மதுபானக் கடைகளை தினமும் 2 மணி நேரம் திறந்து வைத்திருந்தால் எந்த பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது என்று கூறியுள்ளார். 

நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பே ஆன்லைன் விற்பனை போன்ற ஏற்பாடுகளை செய்திருக்கலாம். என்னைப் பொருத்தவரை பூரண மதுவிலக்கு என்ற கொள்கையானது உலகம் முழுவதும் தோல்வி அடைந்திருக்கிறது. தமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் தலைதூக்கும். உயிரிழப்புகள் ஏற்படும். 

பொது முடக்கத்தால்தான் குற்றச் சம்பவங்கள் குறைந்தன. மதுபானக்கடைகள் திறப்பால் மட்டும் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கவில்லை. மதுவை தடை செய்தால் மட்டும் பிரச்சனைகளை தீர்த்து விட முடியாது என்று கூறியுள்ளார்.