உயர்நீதிமன்ற அறிவுரையை ஏற்காமல் ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி ஆகியோர் தொடர்ந்து முதலமைச்சரையும் தமிழக அரசையும் காழ் புணர்ச்சியோடு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவதாகவும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆர்.எம் பாபு முருகவேல், சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவல் துறை இயக்குனர்  திரிபாதி அவர்களை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக முதலமை ச்சரையும், தமிழக அரசையும் அடிப்படை ஆதாரமின்றி தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபட வேண்டாமென ஏற்கனவே திமுக  தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால் அதையெல்லாம் ஏற்காமல் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் மதிக்காமல், தொடர்ந்து ஆதாரமில்லாமல் உண்மைக்கு புறம்பாக மத்திய ஆவணக்காப்பகம், மத்திய தகவல் அறிவியல் பிரிவு என இதுபோன்ற எதையுமே பின்பற்றாமல் தொடர்ந்து முதலமைச்சரையும், தமிழக அரசையும்  அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக திமுக தலைவர்கள் பேசி வருகின்றனர். 

கிராமசபை என்கிற பெயரில் கூட்டம் நடத்தக் கூடாது என்று அறிவித்திருக்கிற அரசாணையையும் மதிக்காமல், தொடர்ந்து தமிழகமெங்கும் அமைதியாக வாழ்கின்ற மக்களிடத்திலே ஒரு பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, பொருளாளர் டி.ஆர் பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி,  கா.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன், உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய திமுக பரப்புரை குழுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, டிஜிபியுடம் புகார் மனு அளித்துள்ளோம். புகார் மீது  பரிசுகளை செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.