கஜா செய்த அட்டூழியத்துக்கு நிவாரணமாக மத்திய அரசு தரும் தொகை கண்ணீர் வரவைக்கிறது. ’இதை வெச்சு நம்பிக்கை நாற்று கூட நட்ட முடியாது!’ என்று கண்ணீர் விடுகிறார்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த லட்சோப லட்சம் மக்கள். இந்நிலையில், கஜா நிவாரண பொருட்கள் கொள்முதலில் கொள்ளையோ கொள்ளை! என்று வெடித்திருக்கும் புகார்கள் கஜாவை விட மோசமாக அதிகார மையத்தை தாக்கி வருகின்றன. 

கஜா பாதித்த மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு பல வகையான நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறது அரசாங்கம். இந்த பொருட்கள், அவை அதிகமாக தயாராகும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் கூட வாங்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த நிவாரண பொருட்கள் கொள்முதலில் பெரும் ஊழல் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 

குறிப்பாக ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அரசின் கட்டுப்பாட்டில் வரும் கைத்தறி நெசவாளர்களிடம் இருந்து போர்வைகளை வாங்காமல், அதே பகுதிகளை சேர்ந்த தனியார் விசைத்தறி உரிமையாளர்களிடம் பல லட்ச  மதிப்பிற்கு போர்வைகள் கொள்முதல் செய்திருக்கிறார்கள், குறைந்த விலையில் குறைந்த தரத்தில் போர்வைகளை வாங்கிவிட்டு அதற்கு அதிக விலைக்கான பில் போட்டு அரசிடம் பணத்தை மோசடி செய்கிறார்கள்! என்று நெசவாளர் சம்மேளன தலைவர் ராஜேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த பிரச்னை குறித்து நமது ஏஸியாநெட் தமிழ் இணையதளம் ஏற்கனவே விரிவான செய்தி வெளியிட்டிருந்தது. 
இந்நிலையில்! பெட்ஷீட்டில் மட்டுமல்ல, நிவாரண வேட்டி, சேலையிலும் ஊழல் நடந்து வருகிறது! என்று பெரும் புகார்கள் வெடித்துள்ளன. 
அதன் விபரம் வருமாறு...

“பெட்ஷீட்டில் மட்டும் இவர்கள் ஊழல் புரியவில்லை, மாற்று துணியில்லாமல் தத்தளிக்கும் மக்களுக்காக வாங்கும் வேட்டி, சேலையிலும் கூட ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஈரோடு பகுதியில் அரசாங்கத்தின் இலவச வேட்டி சேலை திட்டத்துக்காக அவற்றை தயாரிக்கும் நெசவாளர்கள் பல நூறு பேர் இருக்கிறார்கள். அவற்றை அவர்களிடம் வாங்குவதை தவிர்த்துவிட்டு சூரத் மற்றும் புனே மாநிலங்களில் இருந்து  தரமற்ற வேட்டி சேலைகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெறும் ஐம்பது ரூபாய்க்கு வாங்கி, அதற்கு இருநூறு ரூபாய்க்கு பில் போட்டு கஜா பணத்தில் ஊழல் செய்கிறார்கள்.” என்று அதே ராஜேந்திரனே இதையும் கூறியுள்ளார். 
க்கும், டெல்டாவுல புயலடிச்சா, ஆளுங்கட்சி பாக்கெட்டுல பண மழைதான்.