மழையால் குறுவை பயிர்கள் சேதம்... பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்... ஈபிஎஸ் வலியுறுத்தல்!!
டெல்டா மாவட்டங்களில் மழையால் குறுவை பயிர்கள் சேதமடைந்ததை அடுத்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் மழையால் குறுவை பயிர்கள் சேதமடைந்ததை அடுத்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் குறுவை நெல் சாகுபடி செய்த சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதுபோலவே, தமிழகத்தில் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியான விலை கொடுத்து வாங்கிய உரம் மற்றும் அதிகரித்த சாகுபடி செலவு, கூலி உள்ளிட்ட உற்பத்தி செலவுகளுடன் விவசாயிகள் தங்களது உழைப்பைக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டு பயிரிட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதைப் பார்த்து மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர்.
இதையும் படிங்க: பரோட்டா சாப்பிடும் போட்டி; சூரிக்கே டஃப் கொடுத்த அரியலூர் இளைஞர்கள்
தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் விவசாயிகள், அரசு போதுமான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும், அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் விளம்பரம் செய்த நிலையில், இந்த விடியா திமுக அரசு முதற்கட்டமாக நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மட்டும் திறக்க வேண்டும் என்றும், முடிந்த அளவு நெல் கொள்முதலை குறைத்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒருசில நேர்மையான அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்தாக மிகுந்த மனவேதனையுடன் விவசாயிகள் செய்தியாளர்களிடம் இந்த அரசை குறை கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: குண்டு வீச மாட்டோம்.. பாட்டிலில் பெட்ரோல் வேண்டும்.. விவசாயிகள் போராட்டம்
இந்த அரசு செய்திகளில் வெளியிட்டுள்ளவாறு நிரந்தர மற்றும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் உடனடியாகத் திறந்திட வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, இந்த அரசு டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகமெங்கும் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை கணக்கெடுக்க, உடனடியாக அதிகாரிகளை அனுப்பிவைக்க வேண்டும் என்றும்; ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்; அனைத்து தற்காலிக மற்றும் நிரந்தர நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறந்து 22 சதவீதம் வரை ஈரப் பதம் உள்ள அனைத்து நெல்மணிகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்; தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்றும்; குறுவை சாகுபடியையும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.