தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் கமிஷனர் அலுவலகத்தையும் ஆட்டி படைத்து வருகிறது.

தினசரி அமைச்சர்கள், எம்எல்ஏக்களை காணவில்லை என்று வரும் புகார்களால் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

88ஆம் ஆண்டு ஜா-ஜெ அணிகளாக அதிமுக பிரிந்த பின்னர் 30 ஆண்டுகள் கழித்து ஓபிஎஸ் சசிகலா அணிகளாக தற்போது பிரிந்துள்ள நிலையை தமிழகம் சந்தித்து வருகிறது.

ஆரம்பத்தில் ஒற்றை ஆளாக பேட்டியளித்து வீட்டுக்கு வந்தார் ஓபிஎஸ். அன்றிரவு முதல் அவருக்கு பெருகி வரும் ஆதரவு 6 எம்எல் ஏக்கள், 3 எம்பிக்கள், பல முன்னாள் அமைச்சர்கள் கட்சியின் அவைத்தலைவர் என வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்க முடிவு செய்த சசிகலா தரப்பினர் தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை கூவத்தூர் பண்ணை வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வு பொது மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே விமர்சிக்கபடுகிறது.

சமூக வலைதளங்களில் சசிகலா தரப்பில் ஆதரவு தெரிவத்துள்ள எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் வாக்களர்களின் எண்ணத்திற்கு எதிராக இருக்கிறார்கள் அவர்களுக்கு போன் செய்து வலியுறுத்துங்கள் என்ற கருத்துகள் பரவி வருகிறது.

இதனிடையே தொடர் போன் தொல்லைகளால் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தங்களுடைய போனை ஆப் செய்து வைத்துள்ளனர்.

தங்கள் தொகுதி எம்எல்ஏ அமைச்சர்களை தொடர்பு கொள்ள முடியாத சம்பந்தபட்டவர்கள் படத்தை போட்டு கடந்த 7ஆம் தேதி முதல் தங்கள் தொகுதி எம்எல்ஏ காணவில்லை.மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.அவரை கண்டால் எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள் என்ற தொலைபேசி எண்ணுடன் போஸ்டர் ஒட்டுகின்றனர்.

சிலர் அதையும் தண்டி தங்கள் எம்எல்ஏவை காணவில்லை என்று புகாரும் அளித்து வருகின்றனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் செல்லூர் ராஜூவை காணவில்லை என்று தொகுதி வாக்காளர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரை கமிஷனர் அலுவலக அதிகாரிகள் பெற்று கொண்டனர்.

இதே போல் இன்றும் அமைச்சர் ஜெயகுமாரை காணவில்லை என்று அவரது தொகுதி வாக்காளர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பழைய வண்ணாரபேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்த நவீன் குமார் என்பவர் கமிஷனர் அலுவலகம் வந்தார்.

கமிஷனர் அலுவலக அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.அதில் காணமல் போன சட்டமன்ற உறுப்பினர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தார்.

அந்த மனுவில் ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் நான். எங்கள் தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார் அவர்களை கண்டுபிடித்து தரும்படி இந்த மனுவை அளிக்கிறேன் சமீபத்தில் கப்பல் விபத்தில் கடல் நீரில் கலந்த எண்ணெய் அகற்றும் பணி இன்னும் முடிவடையவில்லை.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பிரச்னை, தொழில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

மீனவர்கள் நிலை மிகவும் பாதிப்புள்ளாகியுள்ளது. இப்பிரச்சனைகளை தீர்க்க மீன் வளத்துறை அமைச்சர் அவர்களை விரைவாக கண்டுபிடித்து தருமாறு கேட்டு கொள்கிறேன்.

குறிப்பு - நான் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் நேரடியாகவே கூறியிருப்பேன். மன்னிக்கவும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை கமிஷனர் அலுவலக அதிகாரிகள் பெற்று கொண்டனர்.

தினம் தினம் அமைச்சர்களை காணவில்லை என்று குவியும் புகார்கள் கமிஷனர் அலுவலக அதிகாரிகளை சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழக அரசியலை கேலி கூத்தாக்கியுள்ளது.