ஒரே வார்த்தை ஓஹோ பஞ்சாயத்து என்று கமலின் சர்ச்சைக் கொடி தமிழக அரசியல் கடந்து தேசிய அளவில் பறக்கிறது. ’சுதந்திர இந்தியாவின் முதல்  தீவிரவாதி ஒரு இந்து.’ என்று கமல் வலிந்து சொன்னது, முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட ஒரு நாடகம்! என்கின்றனர் விமர்சகர்கள். 

ஏன், யாருக்காக இந்த நாடகம்? என்று கேட்டால், ‘எடப்பாடியின் வெற்றிக்காகத்தான். அதுவும் பி.ஜே.பி.யின் அஸைன்மெண்டில் இதை செய்திருக்கிறார்.’ என்கிறார்கள்.

வில்லங்கமான இந்த விமர்சனத்தின் பின்னணியை அவர்களே விளக்கட்டும்....“கமல்ஹாசன் ஒன்றும் தன்னிச்சையாக அரசியல் களத்துக்கு வரவில்லை. அவரது பின்னணியில் ஒரு பெரிய அரசியல் சக்தி இருக்கிறது. அது பி.ஜே.பி.தான்! கமல் பி.ஜே.பி.யின் ‘B டீம்’ என்று துவக்கத்திலிருந்தே விமர்சனங்கள் இருக்கின்றன. அதை மெய்ப்பிக்கும் விதமாக மோடியையோ, மோடியின் அரசையோ அவர் பெரிதாக விமர்சிப்பதே இல்லை. 

தனக்கு வழங்கபப்ட்ட அஸைன்மெண்டின் படி தமிழகத்தின் பிராந்திய கட்சிகளின் செல்வாக்கு கூட்டை மட்டும் கலைத்துக் கொண்டே இருக்கிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரது பரப்புரையை எடுத்துப் பாருங்கள், மோடிக்கு எதிராக உருப்படியாக எதையுமே சொல்லாமல் அவர் பூசி மெழுகியிருப்பது புலனாகும். 

இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தலை விட பல மடங்கு முக்கியத்துவத்துடன்  பார்க்கப்பட்டது தமிழகத்தின் பதினெட்டு தொகுதிகளில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல். இந்த தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்தால்தான், தமிழகத்தில்  பி.ஜே.பி. கூட்டணி தலைவனான அ.தி.மு.க.வால் ஆட்சியை தொடர முடியும். அவர்கள் ஆட்சியை தொடர்வதுதான் பி.ஜே.பி.க்கும் நல்லது. அதனால்தான் எப்பவோ கவிழ வேண்டிய எடப்பாடியாரின் அரசை, முழுமையாக முட்டுக் கொடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் பதினெட்டு தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு பெரிய வெற்றி கிடைக்காது, மிக குறுகிய இடங்களே கிடைக்கும் என உளவுத்துறையின் சர்வே சொல்கிறது. இது போதாதென்று ‘மே 23 அன்று இந்த ஆட்சியின் ஆயுட்காலம் முடியும். கழக ஆட்சி விரைவில் மலரும்.’ என்று ஸ்டாலின் மிக  உறுதியாக கூறிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் கவனித்த பி.ஜே.பி. மற்றும் அ.தி.மு.க. இரண்டும் இணைந்து வரும் 19-ம் தேதி நடக்க விருக்கின்றன் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்தே ஆக வேண்டும் எனும் முடிவுக்கு வந்துள்ளன. 

அதிகார பலத்தை பயன்படுத்தி சாதக சூழலை உருவாக்குவது ஒரு புறம் என்றால், மக்களே முன்வந்து அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட வைப்பதும் ஒரு சாணக்கியத்தனம்தான். அந்த வகையில்தான் கமல்ஹாசனை விட்டு இந்த நாடகத்தை நடத்தியுள்ளனர். 

அதாவது பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்துள்ளதன் மூலம் சிறுபான்மை வாக்கு வங்கியானது நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு விழாது. அதேநேரத்தில் இந்துக்களின் வாக்கு வங்கியை மிக முழுமையாக ஈர்த்தாக வேண்டிய இக்கட்டில் உள்ளது ஆளுங்கட்சி. அதன் வெளிப்பாடே பி.ஜே.பி.யின் கட்டளை மூலம் கமல்ஹாசன், இஸ்லாமியர் மண்ணான பள்ளப்பட்டியில் போய் நின்று கொண்டு ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.’ என்று வேண்டுமென்றே பேசியிருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ‘கொழுப்பேறிய கமலின் நாக்கை அறுக்க வேண்டும்.’ என்று கொதித்திருக்கிறார். அ.தி.மு.க.வின் நிர்வாகிகளும், இணையதள விங்கும் இதுவரையில் இந்துக்களின் நன்மைக்காக இப்படி பொங்கியதே இல்லை. ஆனால் இந்த முறை பொங்கி வடிகிறார்கள். இதன் பின்னணி?...இந்துக்களை தப்பாக பேசிய கமலை திட்டுவதன் மூலம் முழுமையாக இந்து மக்களின் ஆதரவை தங்கள் கட்சிக்கு இழுப்பதற்காகத்தான். 

ஆக கமலின் நாக்கு நடித்திருக்கிறது அரசியல் மேடையில். அதை இயக்கியிருப்பது பி.ஜே.பி.யே. நான்கு தொகுதிகளில் அ.தி.மு.க. வென்று, எடப்பாடியாரின் ஆட்சியை தப்ப வைப்பதற்காகவே இந்த நாடகம் நடத்தப்பட்டு, அதில் கமல் வில்லத்தனமான ஹீரோவாகியுள்ளார்.” என்கிறார்கள். அடங்கொன்னியா! என்னா அரசியல்.......