கரூரில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கி பேசினார். 

அப்போது தமிழக மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுப்பவராகவும், தொண்டர்களை அரவணைத்து செல்லும் தலைவராகவும் மு.க.ஸ்டாலின் திகழ்வதால் அவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தி.மு.க.வில் இணைந்ததில் நான் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்தார்.

தற்போது கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இல்லை. ஆனால் அதற்கு மாற்றாக தமிழக மக்களின் உரிமையை மீட்க மத்திய அரசினை துணிச்சலுடன் எதிர்த்து போராடும் ஆளுமை மிக்க தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பது நமக்கு மிகப்பெரிய பலம் என்றார்.

தற்போது 21 சட்டமன்ற தொகுதிக்கான இடங்கள் காலியாக இருக்கின்றன. வருகிற பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து, அந்த தொகுதிகளுக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. இந்த 21 தொகுதிகள் போக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான வழக்கில் இன்னும் 11 தொகுதிகள் காலியாக போகின்றன. இந்த இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் மு.க.ஸ்டாலின் அமருவார் என அவர் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வந்ததிருந்தவர்களுக்கு கிடா வெட்டி சூப்பரான விருந்து பரிமாறப்பட்டது.