கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல் உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியள்ளார். 

கொரோனா பரவல் காரணமாக வரும் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளதாக கூறி உள்ளார். மேலும், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் தேவை என குறிப்பிட்டுள்ளார். 

பெருந்தொற்று காரணத்தால் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதில் சிக்கல் நேரிடும். ஆகையால், செப்டம்பரில் செமஸ்டர் தேர்வு நடத்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பல்கலைக் கழக மானியக்குழு உள்ளிட்ட அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.