அதிகார மையம்! அதிகார மையம்! எனும் வார்த்தைகள் அரசியல் அகராதியில் பயன்படுத்தப்பட கேட்டிருக்கிறோம். ஆனால் சமீபத்தில் தமிழக தலைமைச் செயலகம் உண்மையிலேயே உச்சபட்ச அதிகார மையம் ஆனது! காரணம்?...முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றதுதான்.

சட்ட ஒழுங்கு, மக்கள் பணியில் துவங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க, முடிவெடுக்க, நல்லதை தட்டிக் கொடுக்க, கெட்டதை தட்டிக் கேட்க! என்று வெகுவாக பயன்படும் இந்த மாநாடு.

ஜெயலலிதா இருக்கும் போது திக் திக் பயத்துடன் நடத்தப்படும் இந்த  மாநாடு இப்போதும் கலகலவென ஜனரஞ்சகமாக நடந்து முடிந்திருக்கிறது.
காவல்துறை அதிகாரிகளுடனான மாநாடை விட, கலெக்டர்களுடனான நிகழ்வில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஜெ., ஆட்சியின்போது எந்த போலீஸ் அதிகாரியும், எந்த கலெக்டரும் தங்கள் மாவட்ட மினிஸ்டர் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டார்கள்.

ஆனால் எடப்பாடி ஆட்சியில் அந்த பிரச்னைகளெல்லாம் இல்லை. அமைச்சரை புகழும் மாவட்ட செயலாளர்கள் போல சில கலெக்டர்கள் பேசியது நெளிய வைத்திருக்கிறது.

ஆனால் எல்லாவற்றுக்கும் ஹைலைட்டான ஒரு விஷயம் நடந்திருக்கிறது. அதாவது மதுரை கலெக்டரான வீரராகவராவ் பேசும்போது ‘கூட்டுறவு துறை அமைச்சரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் படி மாவட்டத்தில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.’ என்று சொல்ல, செல்லூரார் முகத்தில் பெருமித சிரிப்பு.

ஆனால் மற்ற அமைச்சர்களோ குபீரென சிரித்துவிட்டார்களாம். காரணம், கூட்டத்தில் ஒரு அமைச்சர் ‘செல்லூராரே தெர்மகோல் சம்பவம் நடந்து ஒரு வருஷம் கழிச்சு மறுபடியும் உங்க மானத்த வாங்கிட்டாரேய்யா உங்க கலெக்டர்’ என்று சொன்னதுதான்.

வைகை ஆற்றில் செல்லூரார் தெர்மகோல்களை மிதக்கவிட்டபோது கூடவே நின்னு சூறாவளியாய் செயல்பட்டவர்தான் இந்த வீரராகவராவ்.