கடந்த வாரம் அத்திவரதர் தரிசனத்தின்போது விஐபிக்கள் செல்லும் பாதையில் பொது மக்கள் சிலரை அங்கிருந்த இன்ஸ்பெக்டர் அனுப்பிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அச்த இன்ஸ்பெக்டரை ஒருமையில் திட்டியதுடன், சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டரைக் கண்டித்து ஓய்வு பெற்ற காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், விஷயம் பெரிதாவதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் , உடனடியாக இன்ஸ்பெக்டரிடம் வருத்தம் தெரிவித்தார்.

இப்பிரச்சனை நடந்தபோது திருவண்ணாமலை எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி அருகில் இருந்தார். இது குறித்து அவர் பேசும்போது, கலெக்டரின் செயல்பாடு அன்று `ஹைப்பராக’ இருந்தது. ஒட்டுமொத்த காவல்துறையினரையும் தவறாகத்தான் பேசினார். நான் குறுக்கிட்டு சமாதானம் செய்ய முயன்றேன். எனினும், கலெக்டர் பொன்னையா அமைதியாகவில்லை. நம்மை ஒருவர் மதிக்கவில்லை என்று நினைக்கும்போது நாம் என்ன செய்ய முடியும். பிறகு, அங்கிருந்து நான் தள்ளி வந்துவிட்டேன்.


இரண்டு மூன்று பேர் டிக்கெட் இல்லாமல் இன்ஸ்பெக்டரை முட்டிவிட்டு ஓடிவிட்டனர். குழந்தைகளுடனும், வயதானவர்களுடனும் வரும் பக்தர்கள் கெஞ்சுகிறார்கள், அழுகிறார்கள். காவல்துறையினர் ஒன்றும் மெஷின் கிடையாது. மனிதாபிமான அடிப்படையில் சிலவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டும். கலெக்டர் கேட்கலாம். அவருக்கான அதிகாரம் இருக்கிறது.

அந்த இடத்தில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகத்தான் அங்கிருந்து வந்துவிட்டதாக எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.