கோவை மாநகராட்சியின் மேயர் பதவியானது, பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் நூறு வார்டுகளிலும் எல்லா கட்சியிலும் எக்கச்சக்க பெண் வேட்பாளர்கள்
ஒரு காலத்தில் அரசியல், தேர்தல் என்றால் அது ‘ஆம்பளைங்க சமாசாரம்’ என்று இருந்தது. ஆனால், சமீப சில வருடங்களாக இது அடியோடு மாறியிருக்கிறது. சில காலங்களுக்கு முன்பு வரை தேர்தல் பிரசாரத்தில் பெண்களையும் இழுத்தனர். காரணம், பெண் வாக்காளர்களின் ஆதரவை பெறுவதற்காக. ஆனால் இன்றோ பெண்கள் அதிகளவில் வேட்பாளர்களாகி இருக்கிறார்கள் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில். அதிலும், கோயமுத்தூர் மாநகராட்சி தேர்தலில் எக்கச்சக்க பெண்கள்.
கோவை மாநகராட்சியின் மேயர் பதவியானது, பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் நூறு வார்டுகளிலும் எல்லா கட்சியிலும் எக்கச்சக்க பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். ஆளும் தி.மு.க., எதிர் அ.தி.மு.க., தேசிய பா.ஜ.க. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர், ம.தி.மு.க. இது போகவும் எக்கச்சக்க சுயேட்சைகள் என்று சிட்டி முழுக்க ச்சும்ம ஜிகுஜிகுவென இருக்கிறது என்று குஜாலாகிறார்கள் மக்கள்.

ஏனென்றால், வாக்கு கேட்க வரும் பெண்கள் வீடுகளுக்கு உள்ளேயே சென்று ‘யக்கோ கொஞ்சம் தண்ணி குடுங்க தாகமா இக்குது’ என்று கேட்டு வாங்கி குடிப்பதில் துவங்கி, பாப்பாவுக்கு பப்பு மம்மம் ஊட்டிவிடுவது, கடைகளில் பணி புரியும் பெண்களோடு செல்ஃபி எடுப்பது, தன் கையால் சமைத்து அதைக் கொண்டு போய் ஆதரவற்ற பெண்களுக்கு ஊட்டி விடுவது என்று நடத்தும் சென்டிமெண்ட் டிராமாக்களுக்கு அளவே இல்லை.
சாலையில் செல்லும் ஆண்களை உரிமையோடு அழைத்து ‘ணோவ் தங்கச்சியை கவுன்சிலராக்கிடுங்கோவ்’ என்று வாக்கு கேட்பது, வயதான பெண்களை ‘ஏனுங்க ஆத்தா நான் உன்ர மக மாதிரியல்லோ. என்னய மேயராக்கிப் போடு. உன்ன என் வூட்டோட வெச்சு பாத்துக்குறேன்’ என்று கண் கலங்குவது என ம்ம்ம்ம்முடியலை ரக ஸ்டைல்களில் ஓட்டு வேட்டையாடி தள்ளுகின்றனர்.

பிரசாரத்தில் வெளுத்து வாங்கும் பெண்களில் முக்கியமான்வர்களென்றால் தி.மு.க.வின் மீனா லோகு, நிவேதா சேனாதிபதி, அமிர்தவள்ளி சண்முகசுந்தரம, அ.தி.மு.க.வின் ஷர்மிளா, கிருபாலினி, பா.ஜ.க.வின் ப்ரீத்தி, உண்ணாமலை, கவிதா என்று ஒரு பட்டியல் நீள்கிறது. இதில் சிலர் சீனியர் வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களோ உரிமையோடு வாக்களர்களின் வீடுகளில் சாதம் எடுத்துப்போட்டு பேசியபடி வாக்கு கேட்கின்றனர்.
ஆக எங்குட்டு திரும்பினாலும் அம்மணிகளின் ராஜ்ஜியமே நடப்பதால், ச்சும்மாவே கலர்ஃபுல்லாக இருக்கும் கோயமுத்தூரு இப்ப டபுள் கலர்ஃபுல் ஆகிடுச்சாமா!
அக்காங்!
