கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாற்றம்.. செந்தில் பாலாஜி இடத்தில் முத்துசாமி..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலக் குறைவு காரணமாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலக் குறைவு காரணமாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய பரிந்துரைத்தார். இதனையடுத்து, உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி சென்னை காவேரி தனியார் மருத்துவமனையில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
செந்தில் பாலாஜியிடம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. தற்போது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த நிலையில் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கோவை மாவட்ட பொறுப்பளராக அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அதில், அமைச்சர்களை மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று அவசரக கால பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து விரைவுபடுத்தவும், சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு, மாற்றங்கள் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
மேலே படிக்கப்பட்ட அரசாணைகளில் அமைச்சர்கள் சிலரை, சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து அந்தந்த மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் நோய் தொற்று மற்றும் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் வருவாய் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி வருவாய் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துச்சாமியை நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அனைத்து துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகளை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது ஆளுநரின் ஆணைப்படி தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.