பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திமுக கூட்டணியில் இணைய முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாமக எந்தக் கூட்டணியில் இணையப்போகிறது என்கிற வதந்திகள் பரவி வருகின்றன.

சமூக வலைதளங்களில் இது விவாதப்பொருளாகி வருகிறது. வதந்திகளையும், யூகங்களையும் நம்ப வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கெனவே கேட்டுக் கொண்டிருந்தார். அன்புமணி ராமதாஸும் விளக்கமளித்து இருந்தார். இருப்பினும் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், பாமக கூட்டணி குறித்த சர்ச்சைகளை முடிவுகட்டும் விதமாக பசுமை தாயகம் அமைப்பை சேர்ந்த அருள் ரத்தினம் என்பவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். "பாமக எந்த கட்சியிடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்த உத்தேசமான விவாதங்களையும், தனிப்பட்ட கருத்துகளையும் சமூக ஊடகங்களின் பகிர்வதை பாமக தொண்டர்களும் ஆதரவாளர்களும் தவிர்க்க கேட்டுக்கொள்கிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு, 2018 டிசம்பர் 30 ஆம் நாள், தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு ஒருமனதாக அளித்துள்ளது. இனி மருத்துவர் ராமதாஸ் மேற்கொள்ளும் முடிவே இறுதியானது. பாமக நிறுவனர் ராமதாஸ் 'கூட்டணி குறித்த முடிவு' அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, சமூக ஊடகங்களில் விவாதம் செய்வது தேவையில்லாத குழப்பத்திற்கே இட்டுச்செல்லும். இந்தக் கட்சி நல்ல கட்சியா? அல்லது அந்த கட்சி நல்லக் கட்சியா?" என்றெல்லாம் ஏட்டிக்குப்போட்டி விவாதங்கள் நமக்கு தேவை இல்லை. கூட்டணி குறித்த முடிவை மருத்துவர் ராமதாஸ் பார்த்துக் கொள்வார்கள்.

எனவே, பாமக தொண்டர்களும் ஆதரவாளர்களும் 'எந்தக் கட்சியுடன் கூட்டணி' என்கிற விவாதங்களை தவிர்க்க கேட்டுக்கொள்கிறோம். உங்களது உத்தேசமான கருத்துகளையும், தனிப்பட்ட கருத்துகளையும், விருப்பங்களையும் உங்கள் மனதுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். அத்தகைய கருத்துக்கள் எதையும் முகநூலில் பகிராமலும், அதுகுறித்து விவாதிக்காமலும் இருக்க கேட்டுக்கொள்கிறோம். மருத்துவர் ராமதாஸ் மேற்கொள்ளும் முடிவு எதுவானாலும், அதனை பாமக தொண்டர்களும் ஆதரவாளர்களும் முழுமனதாக ஏற்று அதன் வெற்றிக்கு உழைப்பார்கள் ' என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கேட்டுக் கொண்டிருக்கிறார்,