கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களையெல்லாம் கொடுக்க முடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீம் கட்சிக்கு 3, மனித நேயம் மக்கள் கட்சிக்கு 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதர கட்சிகளுடனான தொகுதிபங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 

குறிப்பாக திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கும், அக்கட்சி எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் சீட் ஒதுக்க மறுத்துவிட்டது. இதனால், அதிருப்தி அடைந்த கே.எஸ்.அழகிரி;- தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதை விட திமுக நம்மை நடத்தும் விதம் மிகவும் கவலை அளிக்கிறது. திமுக அளிப்பதாக கூறும் தொகுதி எண்ணிக்கை, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது என்றார்.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி;- கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களையெல்லாம் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிக்கும் மன சங்கடம் இருக்கத்தான்  செய்யும். முன்போல் இல்லாத அளவுக்கு கூட்டணி கட்சிகளிடம் திமுக கறாராக பேசி வருவது கூட்டணி கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.