மே 1 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயகக் காற்று வீசட்டும் மக்களாட்சி எனும் மலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மலரட்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல் அனுப்பியுள்ளார்.
மே 1 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயகக் காற்று வீசட்டும் மக்களாட்சி எனும் மலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மலரட்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல் அனுப்பியுள்ளார். இதுக்குறித்து அவர் எழுதிய மடலில், மே 1 உலகம் போற்றும் உழைப்பாளர் நாள் - மேதினி போற்றும் மேதினம். பாடுபடும் பாட்டாளிகள் சிந்தும் வியர்வைக்கும், அவர்தம் உரிமைக்கும் உரிய நாள். தொழிலாளர் நலன் காக்கும் நன்னாள். அந்நாளை ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறையாக அறிவித்து, தொழிலாளர்களின் உரிமை காத்திடும் உன்னத ஆட்சி நடத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். மக்களாட்சியின் அனைத்துக் கட்டமைப்புகளையும் வலிமைப்படுத்திய முதல்வர் அவர். அந்த மே 1 இல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இதுவரை ஆண்டுக்கு 4 முறை ஏனோதானோவென பெயருக்கு நடைபெற்று வந்த கிராமசபைக் கூட்டங்கள், இனி முறையாகவும் முழுமையாகவும், ஆண்டுக்கு 6 முறை பயனுள்ள வகையில் பாங்குடன் நடைபெறவும், அதில் கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று, தங்கள் ஊர் நலனுக்கான தீர்மானங்களை நிறைவேற்றிச் செயல்படுத்தவும், நமது அரசு விதி எண்: 110இன் கீழ் அறிவித்துள்ளது. பேரவையில் வெளியிடும் அறிவிப்புகள் காற்றோடு காற்றாகக் கலந்து கரைந்து விடாமல், மண்ணில் வேர் விட்டு, விண் நோக்கி வளர்ந்து வியத்தகு பலன் தரும் மரம் போல செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதுதான் நமது திராவிட மாடல் அரசின் அடிப்படை நோக்கம்.

தேசிய ஊராட்சிகள் நாளான ஏப்ரல் 24 அன்று உங்களில் ஒருவனான நான், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியம் செங்காடு ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் மக்களுடன் இணைந்து மக்களாகப் பங்கேற்றேன். மக்களாட்சியில் மக்கள்தான் முதலாளிகள். அவர்களின் குரல்தான் வலிமையாகவும் அதிகமாகவும் ஒலிக்க வேண்டும். அதனால், அந்த கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம், குறிப்பாக, தாய்மார்களிடம் மைக்கைக் கொடுக்கச் சொல்லி, அவர்களின் கோரிக்கைகளை முன்வைக்குமாறு கூறினேன். கோரிக்கைகளைச் சொல்வதற்கு முன்பாக, ஓராண்டுகால திமுக அரசின் திராவிட மாடல் நிர்வாகம் சிறப்பாக இருப்பதையும், தங்களுடைய அடிப்படைத் தேவைகள் வரிசையாக நிறைவேறி வருவதையும் மகிழ்வுடன் தெரிவித்துவிட்டு, தங்கள் கிராமத்திற்கான கோரிக்கைகளையும், தங்களின் தனிப்பட்ட வேண்டுகோள்களையும் முன்வைத்தனர். அத்தனையும் பதிவு செய்யப்பட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது. நாடு போற்றும் வகையில் நல்லாட்சியை வழங்கி வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, உள்ளாட்சியிலும் அதனை நடைமுறைப்படுத்தி ஊராட்சிகள்தோறும் செயல்படுத்தி வருகிறது. அனைத்து மக்களுக்குமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற இலட்சியத்துடன் செயலாற்றுகிறது நமது திராவிட மாடல் அரசு.

ஆன்லைன் வசதிகள் மூலமே தங்களுடைய இருப்பிடத்திலிருந்து முதல்வரின் முகவரியைப் பயன்படுத்தி, தலைமைச் செயலகத்திற்கு மனு அனுப்பி, உடனடியாகப் பதில் பெற முடியும், கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நிலையை அடைந்திருக்கிறோம். தற்போது அதனையும் கடந்து, ஊராட்சி மன்றங்களின் அலுவல்பணிகள் விரைவாகவும் விரிவாகவும் நடைபெறுவதற்கு ஏதுவாக தலைமைச் செயலகம் போல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போல, கிராமச் செயலகத்தை நமது அரசு ஒவ்வொரு ஊராட்சியிலும் உருவாக்கிட இருக்கிறது. முந்தைய ஆட்சியாளர்கள் போல எதிர்க்கட்சிகள் பொறுப்பு வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகளைப் புறக்கணிப்பது, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, திட்டங்களைக் கிடப்பில் போடுவது போன்ற காழ்ப்புணர்வு ஓரவஞ்சனைச் செயல்பாடுகள் கழக அரசில் நிச்சயம் இருக்காது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊராட்சி நிர்வாகங்களில் எந்தக் கட்சி இருந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டுக்கு நல்லாட்சியினை வழங்கிடும் பொறுப்பினை உங்களில் ஒருவனான நான் ஏற்றிருக்கிறேன். ஒவ்வொரு கிராமமும் என் கிராமம்தான். ஒவ்வொரு தமிழரும் என் உறவுதான். மே 1 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஜனநாயகக் காற்று வீசட்டும் மக்களாட்சி எனும் மலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் மலரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
