இன்று மாலைக்குள் முழுமையாக மின் விநியோகம்.. களப்பணியாளர்களை பாராட்டி தள்ளிய முதல்வர் ஸ்டாலின்..!
தமிழக அரசு எடுத்திருக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகத்தான், அதேபோல, அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, செயல்பாடு காரணமாக மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரிய அளவிலே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு எந்தச் சேதங்களும் இல்லை.
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் விடிய விடிய, சிறப்பாக பணியாற்றினார்கள் என முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகப் பகுதியில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின்;- நேற்றைய தினம் நான் தென்காசி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, சென்னைக்கு திரும்பினேன். திரும்பிய உடனேயே இரவோடு இரவாக கண்ட்ரோல் ரூமுக்கு நேரடியாகச் சென்று புயல் நிலைமை என்ன என்பது குறித்து ஆய்வு செய்தேன். புயல் எந்த மாவட்டத்திற்கு வரும், மழை எங்கே அதிகம் பெய்யும் என்பதை அறிந்து, அந்தந்த மாவட்டத்தினுடைய ஆட்சித் தலைவரிடத்திலே காணொலிக் காட்சி மூலமாக நேரடியாகப் பேசி விவரங்களை அறிந்து கொண்டேன். அதற்குப் பிறகு, விடிய விடிய ஒவ்வொரு ஆட்சித் தலைவரிடத்திலும் என்ன நிலைமை, எப்படி இருக்கிறது, புயல் கடந்துவிட்டதா? அதிலும் குறிப்பாக மகாபலிபுரத்தில் அந்தப் புயல் கடக்கிறது என்று சொல்லிய அந்த ஆட்சித்தலைவரிடத்தோடு அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நான் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன்.
இதையும் படிங்க;- சென்னையில் மின்தடை எப்போது சீராகும்..? அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய தகவல்..!
அதற்குப் பிறகு இன்று காலை தென் சென்னை கொட்டிவாக்கம் பகுதியிலும், ஈஞ்சம்பாக்கம் பகுதியிலும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மீனவர்கள் பகுதிக்குச் சென்று அந்த மக்களையும் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு அவர்களுக்கான நிவாரண உதவிகளையும் செய்துவிட்டு, இப்போது வடசென்னை பகுதியில் இருக்கக்கூடிய இந்த காசிமேடு பகுதிக்கு வந்திருக்கிறேன். மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலிலிருந்து தமிழகம் அதிலும் குறிப்பாக, சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது என்பதை முதலில் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழக அரசு எடுத்திருக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகத்தான், அதேபோல, அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, செயல்பாடு காரணமாக மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரிய அளவிலே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு எந்தச் சேதங்களும் இல்லை. மரங்கள் விழுந்திருப்பதைக்கூட உடனடியாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அது அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்தப் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மிகச் சிறப்பான முறையில் செய்திருக்கிறார்கள். இரவென்றும் பாராமல், பகலென்றும் பாராமல் நம்முடைய அமைச்சர் பெருமக்கள் குறிப்பாக, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய நேரு மற்றும் பல்வேறு அமைச்சர்களும், நம்முடைய சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் முழுமையாக தங்களை இதில் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சியின் ஊழியர்கள், மின்சார வாரியத்தின் ஊழியர்கள், காவல் துறையைச் சார்ந்த சகோதரர்கள், தீயணைப்புப் படையைச் சார்ந்திருக்கக்கூடிய வீரர்கள், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தூய்மைப் பணியாளர்களெல்லாம் முழுமையாக தங்களை இதில் ஈடுபடுத்திக்கொண்டு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது என்பது பாராட்டுக்குரியது. அதற்காக நான் முதலமைச்சர் என்கிற முறையிலும், அரசின் சார்பிலும் என்னுடைய வணக்கத்தை, நன்றியை, வாழ்த்துகளை, பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இப்படி ஒரு சூழல் அமையும் என்று எதிர்பார்த்து முன்கூட்டியே அரசு எல்லாவித நடவடிக்கைகளிலும் முழுமையாக திட்டமிட்டு செயல்பட்டது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். குறிப்பாக சென்னையில் 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்தப் பணியை கண்காணிக்க வேண்டும் என்று அவர்களை நியமித்து அந்தப் பணியையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். 5000 பணியாளர்கள் நேற்று இரவு முழுவதும் நிவாரணப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போது கிட்டத்தட்ட 25,000 பணியாளர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டு, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 37 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்ட நிலையில், மாநில சராசரி 20.08 மி.மீ ஆகும். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. இவ்வளவு அதிகமான மழை பெய்திருந்தாலும் பெருமளவு சேதம் ஏற்படாமல் இந்த அரசு தடுத்திருக்கிறது.
கனமழை காரணமாக இதுவரை நமக்கு கிடைத்திருக்கும் செய்திகள்படி 4 உயிரிழப்புகளும், 98 கால்நடை இறப்புகளும் பதிவாகியிருக்கிறது. 181 வீடுகள், குடிசைகள் சேதமடைந்திருக்கிறது. மற்ற சேத விவரங்களெல்லாம் முறையாக கணக்கெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் சூழ்நிலையை உணர்ந்து, அவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு முன்னரே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த நிவாரண முகாம்களை பொறுத்தவரை, 201 நிவாரண முகாம்களில், 3163 குடும்பங்களைச் சார்ந்த 9130 நபர்கள் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. கண்காணிப்பு அலுவலர்கள், தொடர்புடைய மாவட்டங்களில் முகாமிட்டு அந்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையைப் பொறுத்தவரை, மாநகராட்சிப் பகுதிகளில் நேற்று இரவு 70 கி.மீ வேகத்தில் வீசிய புயல் காற்றின் காரணமாக, சுமார் 400 மரங்கள் விழுந்திருக்கிறது. 150 மரங்கள் தெரு விளக்குகள் மீது விழுந்து சாய்ந்திருக்கிறது. மேலும், சேதாரங்களை சரிசெய்ய இப்போது 25,000 பணியாளர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். 900 மோட்டார்கள் தயார் நிலையில் இருக்கிறது, அதில் 300 மோட்டார்கள் தான் இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. 22 சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கவில்லை, அதனால் போக்குவரத்து எந்தவித தடையும் இல்லாமல் சீராக போய்க் கொண்டிருக்கிறது. வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்துவது, மின்கம்பங்களை சரிபடுத்துவது ஆகியவை உடனுக்குடன் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. வாகனப் போக்குவரத்திற்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் துரிதமாக சீர்செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலத்த காற்றின் காரணமாக, மின்கம்பங்கள், மின்கடத்திகள் சேதம் அடைந்திருக்கிறது. அதன் காரணமாக, மக்களுடைய பாதுகாப்பிற்காக 600 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. 600 இடங்களில் துண்டிக்கப்பட்டிருந்தாலும், இப்போது வரைக்கும் 300 இடங்களில் அது சீர்செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள பணிகளை சீர்செய்யும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதுவும் மீதமுள்ள பணிகளையும் இன்று மாலைக்குள் சரி செய்துவிடுவோம் என்று மின்துறை அமைச்சர் அவர்களும், மின்துறை அதிகாரிகளும் என்னிடத்தில் சொல்லியிருக்கிறார்கள். சேத மதிப்பீடும் கணக்கிடப்பட்டிருக்கிறது. அந்தக் கணக்கெடுப்பெல்லாம் வந்தவுடன் விரைவாக பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- மாண்டஸ் புயலால் பெரிய பாதிப்பா? நிவாரணம் எப்போது? அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்