இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், தமிழகத்திற்கு வரும் இலங்கை தமிழர்களுக்கான விடிவுகாலத்தை இந்த அரசு ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் சட்டபேரவையில் பேசினார்
பட்ஜெட் மீதான விவாதம்:
2022- 23 ஆண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதங்கள், சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அதன் படி, இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியார் பதில் உரையாற்றினர்.பின்னர் பல்வேறு தீர்மானங்கள் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸடாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது " நமது அரசு பல்வேறு மாநிலங்களில், வெளிநாடுகளில் பாராட்டக்கூடிய அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மக்களுக்கு தேவையான மிக சிறப்பான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியும் செயல்படுத்தியும் வருகிறது. மேலும் இன்று பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு பதில் உரையாற்றி, அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜனும், எம்.ஆர்.கே பன்னீர் செல்வமும் அனைவரது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றனர் என்றார்.
அமைச்சர்களுக்கு வாழ்த்து:
மேலும் முக்கியமான துறையானது நிதித்துறையை பெற்றிருக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மிகச் சிறப்பான வகையில் தன்னிடம் உள்ள அனுபவங்களைக் கொண்டு, வெளிநாடுகளில் பெற்றிருக்கக்கூடிய நல்ல அம்சங்களையெல்லாம் மனதில் தேக்கி வைத்துக்கொண்டு அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் என்று முதலமைச்சர் புகழாரம் சூட்டினார்.
வேளாண்துறை அமைச்சரும், வேங்கையின் மைந்தன் என்ற நிலையிலிருந்து இப்போது விவசாயிகளின் மைந்தனாக மாறி, அவரும் தன்னுடைய கடமையை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார். இதுப்போல் ஆண்டுதோறும் நல்ல செயல்பாடுகள் தொடர வேண்டும் என்றும் அந்த நம்பிக்கை தனக்கு உறுதியாக இருப்பதாகவும் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், இருவருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இலங்கை தழிழர்களுக்கு விடிவுகாலம்:
இலங்கையில் நிகழும் பொருளாதார நெருக்கடியால் பல்வேறு இன்னல்களை அடைந்து வரும் இலங்கை தமிழர்கள்,இடம்பெயர்ந்து அடைக்கலமாக தமிழகத்திற்கு வருவதாக ஊடகத்தில் வெளியான செய்திகளை நானும் பார்த்தேன்.அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறபித்து, மத்திய அரசிடமும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் தொடர்புகொண்டு இதை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்திற்கு வரும் ஈழ தமிழர்களுக்கான விடிவுகாலத்தை இந்த தமிழக அரசு ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் சட்டபேரவையில் பேசினார்.
மேலும் பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் நான் மேற்கொள்ளவிருக்கும் துபாய் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சொல்வது ஒன்றே ஒன்று தான், இந்தியாவில் நம்பர் 1 முதல்வர் என பாராட்டப்படுவது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அதைவிட மகிழ்ச்சி இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழகம்தான் எனக் கூறும்படி வரவேண்டும் என்பது தான். அதற்கு இன்று மாலை நான் மேற்கொள்ளவிருக்கும் துபாய், அபுதாபி பயணம் நிச்சயம் துணை நிற்கும் என்று அவர் கூறினார். இதைத் தொடர்ந்து தமிழக சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: புள்ளி விவரம் சொல்லி சூடேற்றிய ஓபிஎஸ்...! பேப்பரை தூக்கியெறிந்த பிடிஆர்..! துள்ளி குதித்த எடப்பாடி
