தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு 1,000 கோடி ரூபாயை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று பிரதமர் மோடியுடன் நடைபெற்ற மாநில முதல்வர்களின் காணொளி மூலமான ஆலோசனை கூட்டத்திற்கு பின் தனது கருத்துகளை எழுத்துபூர்வமாக அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் ஊரடங்கு கடுமை யாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் மட்டும் மிகுந்த பாதுகாப்புடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கட்டு மானம், பாசனம் உள்ளிட்ட பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், ஏழை மக்களுக்கு உதவும் வகை யிலும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊதியத்தை, ஊராட்சி செயலர் கள் மூலம் ரொக்கமாக வழங்க அனுமதிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது தினமும் 7,500 பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதை 10 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். எனவே, கூடுதல் எண்ணிக்கையில் பிசிஆர் பரிசோதனை கருவிகளை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் கரோனா சிகிச்சை தொடர்பான மருத்துவ உபகரணங் கள், மருந்துகள் உற்பத்தி நிறுவனங் களுக்கு முதலீட்டு மானியம், வட்டி மானியம் உள்ளிட்ட சிறப்பு ஊக்க சலுகை தொகுப்புகள் அறிவிக் கப்பட்டுள்ளன. அதன்கீழ், தற்போது 42 நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக அதிகரிக்கும் வகையில், உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கு உழவர்கள் நேரடி யாக உற்பத்தி பொருட்களை கொண்டு செல்லவும் போக்குவரத்து மானியம் வழங்க வேண்டும். மேலும், ஏற்கெனவே கடிதங்கள் மற்றும் காணொலி காட்சி மூலம் நான் வலியுறுத்தியபடி, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். நிதி பற்றாக்குறை அளவை மாநில உற்பத்தி மதிப்பில் 2020-21 ஆண்டில் 4.5 சதவீதமாகவும், கடன் வாங்கும் அளவை 33 சதவீதத்துக்கு அதிகமாகவும் அனுமதிக்க வேண்டும்.

மருத்துவ மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வாங்க தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இடைக் கால நிதியாக ரூ.1,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். முன்னுரிமையற்ற குடும்ப அட்டை தாரர்கள் உட்பட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்க கூடுதல் உணவுதானியங் களை ஒதுக்க வேண்டும். நெல் கொள்முதல் செய்யும் பணிகளுக்காக வழங்கப்படும் மானியத் தொகை ரூ.1,321 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மின் உற்பத்தி பிரிவுக்கு நிவாரண தொகுப்பு அறிவிக்க வேண்டும்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஊழியர்களுக்கு சம்பளம், வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ நிலுவைத் தொகையை வழங்கும் வகையில் அடுத்த 6 மாதங்களுக்கு குறுகிய கால கடன்கள், மூலதன கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜிஎஸ்டி முன் வரி, வருமான வரியை 6 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.