தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும்டன் ஒரே விமானத்தில் பயணிக்க இருந்த நிலையில், அந்தப் பயணத்தை முதல்வர் ரத்து செய்துவிட்டார். 
திருச்சி அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ரத்தினவேல் மகனின் திருமண விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வந்திருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருச்சியிலிருந்து சென்னைக்கு இரவு 8 மணிக்கு விமானத்தில் செல்ல முதல்வர் திட்டமிட்டிருந்தார். அரசு தரப்பிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கரூர் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்தார். கட்சி நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு திருச்சி வந்து, இரவு 8 மணிக்கு சென்னை செல்ல ஸ்டாலினும் திட்டமிட்டிருந்தார். மு.க. ஸ்டாலின் திருச்சி வந்து அதே விமானத்தில் செல்லும் தகவல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரியவந்தது. இதனையடுத்து திடீரென தனது பயணத் திட்டத்தை மாற்றிய முதல்வர், திருச்சியிலிருந்து நாமக்கல் வழியாக சேலத்துக்கு காரில் சென்றுவிட்டார். பிறகு சேலத்திலிருந்து இரவு 11 மணிக்கு விமானத்தில் அவர் சென்னைக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஒரே விமானத்தில் பயணிப்பதை முதல்வர் பழனிச்சாமி தவிர்த்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வரின் பயணத் திட்டம் திடீரென மாற்றப்பட்டதில் அரசியல் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.