வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் துணைமுதல்வர் ஓபிஎஸ், ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். 

கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 110 விதியின் கீழ் அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வறுமையில் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதற்கான அரசாணையும் அண்மையில் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு சார்பில் ரூ.1200 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில்‘கஜா' புயலின் தாக்கத்தாலும் பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்களுக்கு இந்த நிதி வழங்கப்படுவதாக முதல்வர் குறிப்பிட்டிருந்தார். இதற்கான கணக்கெடுக்கும் பணிகளும், தொழிலாளர்களின் விபரங்களும் தீவிரமாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தைக் கண்காணிப்பதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

 

இந்தத் திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். குறிப்பிட்ட சில பயனாளிகளின் அதற்கான சான்றிதழை வழங்கினார். இதையடுத்து பயனாளிகளின் வங்கி கணக்குகளில் 2000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.