CM Edappadi palanisamy speak about pon radha krishnan
பாஜக ஆளும் மாநிலமான உத்தரபிரதேசத்தைவிட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணி காக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாகர்கோவில் கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி மையமாகசெயல்பட்டு வருவதாகவும், ரவுடிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தற்போது தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இல்லை என்றும் பொன்னார் தெரிவித்தார்.
இதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்டோர் பாஜகவை இந்த கருத்து தொடர்பாக தாக்கி பேசி வருகின்றனர். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது தவறு என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உத்தரபிரதேசத்தைவிடவா தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு என கேள்வி எழுப்பினார்.
அதிமுகவின் இரு அணிகளையும் பிரதமர்தான் இணைத்து வைத்தார் என ஓபிஎஸ் கூறியதைக் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூற மறுத்துவிட்டார்.
