தமிழகத்தில்புதிதாக 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நேற்று வரை கொரோனாவால் 67 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களை காக்கும் பொருட்டு பிரதமர் மோடி அவர்கள் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அனைத்து துறை அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். 

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கண்டறியும் விதமாக ஈரோடு, சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வீடு, வீடாக சென்று கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதனிடையே தமிழகத்தில் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வரும் நிலையில், அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள், மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அதிரடி அறிவிப்புகள் என முதலமைச்சர் பழனிசாமி புயல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார். 

இந்த விஞ்ஞானி யுகத்திலும், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றனர். கடவுள் சக்திக்கு விஞ்சியது ஏதுமில்லை என்பதால் தமிழக கோவில்கள் பலவற்றிலும் கொரோனா நோயிலிருந்து காக்கும் விதமாக யாகங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவின் படி, சேலத்தில் உள்ள கோட்டை அழகிரி நாத சுவாமி கோவிலில் தன்வந்திரி யாகம் நடைபெற்றுள்ளது. அரசின் உத்தரவின் படி கூட்டம் சேராமல், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முறையாக கையாண்டு யாகம் நடைபெற்றுள்ளது.