கடும் வெயிலில் அ.தி.மு.க, மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி திடீரென  தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார். அவரை ஒரு நாள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் அமைச்சர் பழனிசாமி, கடந்த சில தினங்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அவரது பயணத்திட்டத்தின்படி, இன்று காலை, பா.ம.க மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சாம் பாலுக்கு ஆதரவாக  காலை 8.30 மணியளவில் திருவல்லிக்கேணியில் இருந்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இதன் காரணமாக முதல் அமைச்சர் பழனிசாமி காலை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று பகல் முழுவதும் ஓய்வு எடுத்துவிட்டு  இன்று மாலை முதலோ,  அல்லது நாளை காலை முதல் அவர்   பிரசாரம் மேற்கொள்வார்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த படியாக தென்சென்னை தொகுதியில் முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.